Tuesday, November 27, 2012

மனசு




" என்னக்கா  சொன்ன விலையிலேயே நிக்குற, கிலோ நூத்தீருவதுன்னு போடு " ஆர்த்தி மீன் விற்கும் பரிமளத்திடம்  பேரம் பேசி கொண்டிருந்தாள் .

" நான்ன உனக்குன்னு தனி விலையாமா சொல்ல போறேன் , எரா மார்கேட்லேயே கொஞ்சம் தான்மா இருந்திச்சி , போன வாரம் நீ கேட்டியேன்னு கொண்டுகினு வந்தேன் , சரி கிலோ நூத்திமுப்பதுன்னு எடுத்துக்கோ பாத்திரத்த காட்டு "ன்னு பரிமளம் ஆர்த்தியிடமிருந்து பாத்திரத்தை வாங்கி ஒரு கிலோ இறாலை எடை நிறுத்தி பாத்திரத்தில் கொட்டினாள் . மேலும் கைப்பிடி நிறைய இறாலை அள்ளி பாத்திரத்தில் போட்டாள் .

"அர்ஜுன்  மம்மி pursea எடுத்துகிட்டு வா " என்று ஆர்த்தி தன் மகனை வாசலிலிருந்து கூப்பிட்டாள் . காதில் ஒரு வயர் தொங்க ஒரு கையில் செல்போனும் மறு கையில் money பர்ஸ் ம் கொண்டு வந்தான் அர்ஜுன் .

" ஊம் புள்ளயா , என்ன தம்பி படிக்குற ? " ன்னு அர்ஜுனை பார்த்து பரிமளம் கேட்டாள். அவன் பதிலேதும் சொல்லாமல் கையில் இருந்த செல்போனை நோண்டி கொண்டிருந்ததை கவனித்த ஆர்த்தி சுதாரித்து " அவன் காலேஜ் ல படிக்கிறான்கா , இன்னிக்கு காலேஜ் லீவு அதான் வீட்ல இருக்கான் " என்றாள்.

" அப்படியா !  நல்லா படிப்பா , இந்த காலத்துல படிச்சாதான் மதிப்பு " ன்னு அவள் அறிவுரை கூறி முடிப்பதற்குள் " இந்தா மா purse " ன்னு ஆர்த்தியின் கையில் பர்ஸ் ஐ திணித்துவிட்டு தொங்கி கொண்டிருந்த வயர் ஐ காதில் சொருகி கொண்டு உள்ளே ஓடினான் .

பரிமளத்திற்கு என்னவோ போல் இருந்தாலும் அதை காட்டிகொள்ளாமல் " செரிமா நான் வரேன் "ன்னு  ஆர்த்தியிடமிருந்து பணத்தை பெற்று கொண்டு வெளியேறினாள்.

" ஏன்டா என்ன பண்றேன்னு கேட்டா சொல்ல மாட்டியா " ஆர்த்தி ஆரம்பித்தாள்
" அதான் நீ சொன்னல்ல அது போதும் " கையில் இருந்த செல்போனை தேய்த்து கொண்டே பதிலளித்தான் .

இதற்கு மேலும் இவனிடம் பேசினால் பிரயோஜனமில்லை என்று எண்ணி கொண்டு ஆர்த்தி இறாலை சுத்தம் செய்ய சமையல் அறையினுள் நுழைந்தாள்.

அர்ஜுனை சொல்லியும் குற்றம் இல்லை , பரிமளம் மட்டுமல்ல வயதான அனைவருக்கும்  அறிவும் , உடல் பலமும் கிடையாது என்று போதிக்கப்பட்ட சமுகத்தில் வளர்ந்தவன் . அறிவுரை என்ற பெயரில் மொக்கை போடுபவர்களாகவும் , தங்களுக்கு தெரிந்த சொற்ப விஷயங்களை மற்றவர்களிடம் கதை அளப்பவர்களாவும் சமுகம் சித்தரித்த வளையத்தினுள் இருக்க பழகி விட்டான் .

குறிப்பாக ஏழை முதியோர்கள் எல்லாம் தங்கள் இளமையை வீணடித்து இப்பொழுது கஷ்டபடுபவராக எண்ணி கொண்டிருந்தான் . சில சமயம் நமக்கே தெரியாமல் மற்றவர்கள் மனதை கீறி  விட்டும் , காய படுத்தியும் , குத்தி கிழித்தும் செல்லும் நம் செய்கைகளும் , வார்த்தைகளும் அவனிடமும் இருந்தது .

பலமுறை மார்க்கெட் செல்லும் வழியில் பரிமளத்தை பார்க்க நேர்ந்தாலும் பார்க்காதது போல் சென்று விடுவான் .

ஒரு மாலை நேரத்தில் கல்லூரி முடித்து விட்டு மார்க்கெட் வழியாக வீட்டிற்கு வண்டியில் சென்று கொண்டிருந்தபோது  தான் அந்த சம்பவம் நடைபெற்றது .

மீனை விற்று  வெறும் ஐஸ்  இருக்கும் கூடையை  எதிரில் சுமந்து வரும் பரிமளத்தின் பார்வையை தவிர்க்க  வேகத்தை கூட்டினான் . முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி வேகத்தை குறைக்க லாரியின் பின்பக்கத்தில் முட்டி சுருண்டு விழுந்தான் . கை வேகமா கல்லில் மோத ரத்தம் கொட்ட தொடங்கியது .உடலெங்கும் சிராயத்திருக்க அவனையும் அறியாமல் " அம்மா " என்று கத்த தொடங்கினான் .

கண்கள் மறைய வேகமாய் ஓடி வரும் பரிமளத்தை பார்த்தான் .
" என்ன அண்ணாத்த பாத்துனுகிற தூக்கு , ஏம்பா அந்த ஆட்டோவ  நிறுத்துங்க " ன்னு அர்ஜுனின் தலையில் கை வைத்து அந்த வயதான பெரியவரின் உதவியோடு ஆட்டோவில் ஏற்றினாள் .

" டேய் சேகரு , இங்க வா , நம்ம சரஸ்வதி அக்கா பக்கத்து வீடு தான் இந்த தம்பி வீடு , அவங்க கிட்ட போய் இது மாறி புள்ளைக்கு அடி பட்டுரிச்சின்னு  கூட்டிகீனு வா , அவங்க வீட்ல பதறிற போறாங்க சின்ன அடி தான்னு சொல்லு நான் சாந்தி நகர் ஆஸ்பித்திரிக்கு போறேன் "ன்னு ஆட்டோ வை கிளப்ப சொன்னாள்.

அர்ஜுன் பரிமளத்தின் வார்த்தைகளை மட்டும் கேட்டு கொண்டிருந்தான் . பரிமளத்தின் கூடையிலிருந்த ஐஸ் மெல்ல கரைய தொடங்கியது .