" டேய் ஒரு நாளு தான்டா , அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடு " அம்மா எதிர்முனையில் .
" என்னது ஒரு நாளா , இந்த வாரத்தில் இது மூன்றாவது நாள் , atleast ஆம்லெட் ஆவது செய்ய வேண்டியது தானே "
"சரி ஒரு நாள் சாப்பிட்டுக்கோ, நாளைக்கு செய்றேன் "
"சரி வைங்க " இணைப்பை துண்டித்தான் .
" வாங்க ப்ரோ நாம share பண்ணிக்கலாம்" .
ஹரி அஞ்சப்பரில் இருந்து உணவு வரவழைத்திருந்தான்
விமலுக்கு ஆசை இருந்தாலும் அஞ்சப்பர் சிக்கன் தந்தூரியுடன் பண்டமாற்றம் செய்ய அவன் அம்மா செய்த சிறுகீரை கூட்டு தகுதியிழந்ததாக தெரிந்தது.
முறையற்ற பரிமாற்றம் செய்ய அவன் சம்பாத்திய சுயமரியாதை அவனை தடுத்தது .
"இல்ல ப்ரோ , இன்னிக்கு புதன்கிழமை நான் முட்ட மட்டும் தான் சாப்புடுவேன் " விமல் சமாளித்தான்.
--- அடுத்த நாள் ---
"டேய் lunch கொண்டு போடா " அம்மா கூப்பிட்டாள்.
"இல்லம்மா நான் வெளியில சாப்பிட போறேன் ".
அம்மா எதுவும் பேசிக்கொள்ளவில்லை .
" ப்ரோ இன்னிக்கு நீங்க ஆர்டர் பண்ணும் போது எனக்கும் சேர்த்து பண்ணுங்க .." ஹரியிடம் சொன்னான் .
"சூப்பர் ப்ரோ , நான் ஆர்டர் பன்றேன்"
யா மோஹிதீன் பிரியாணியின் சுவை அவன் நாவில் ஒட்டி கொண்டது .
ருசி கண்ட பூனையாய் விமல் தினமும் வெளியே சாப்பிட தொடர்ந்தான் .
அவனுடன் பணிபுரிபவர்களும் வெளியே உணவு வாங்கி சாப்பிடும் வழக்கத்தையே கொண்டிருந்தனர்.
டீம் லன்ச் , பர்த் டே ட்ரீட் , ஆன்சைட்டில் இருந்து வருபவர் வாங்கி தரும் ஓசி சோறு என அடிக்கடி வெளியே சென்று சாப்பிடும் விமலுக்கு OMR சாலையில் உள்ள அத்தனை உணவகங்களும் பரிச்சயம் .
----- 6 மாதங்களுக்கு பிறகு -----
கவின் புதிதாக விமலின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்திருத்தான் .
கவினின் நேர்மையும் , எதையும் கற்று கொள்ள விரும்பும் ஆர்வமும், தன்மையான குணமும் எல்லோருக்கும் அவன் மேல் ஒரு ஈர்ப்பை உண்டுபண்ணியது.
ஒரு நாள் நள்ளிரவு வரை இருந்து கவின் விமலுக்கு உதவியது , அவனுக்கு கவினின் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டு பண்ணியது .
" கவின் , lunch க்கு வரீங்களா " விமல் அழைத்தான் .
கவின் ஆரம்பத்தில் அவர்களுடன் செல்ல தயங்கினான் , ஆனால்
விமலின் வற்புறுத்தலால் அவர்களுடன் சென்றான் .
விமல் , ஹரி மற்றும் கவின் சாப்பிட அமர்ந்தனர் .
விமலும் ஹரியும் புதிதாக அவர்கள் அலுவலக கேன்டீனில் திறக்கப்பட்ட பிரியாணி கடையில் இருந்து சிக்கன் 65 பிரியாணி வாங்கி வந்தனர்.
கவின் அவன் கொண்டு வந்ததை எடுத்து வெளியே வைத்தான்.
சாம்பார் சாதம் , வெண்டைக்காய் பொரியல் , ஒரு சிறு டப்பாவில் மாங்காய் ஊறுகாய் .
" கவின் , நீங்க வெஜ்ஜா " ஹரி விசாரித்தான்.
"இல்ல ப்ரோ , நான்-வெஜ் "
ஹரி எதற்கு இந்த கேள்வி கேட்டான் என்று கவினுக்கு புரிந்தது .
கவினின் வெண்டைக்காய் பொரியலும் அவர்களின் சிக்கன் 65 ம் பகிரப்பட்டது.
"அது என்ன மாங்கா ஊறுகாயா " விமல் கேட்டான் .
" ஆமா ப்ரோ " விமல் கேட்காமலே கவின் அதில் கொஞ்சம் எடுத்து அவர்கள் தட்டில் வைத்தான்.
விமலும் ஹரியும் அந்த ஊறுகாயை தொடவே இல்லை , வெண்டைக்காய் பொரியலை மட்டும் கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டனர்.
அடுத்த நாள் கவின் மீன் குழம்பு கொண்டு வந்திருந்தான் கூடவே ஊருகாயும் .
இன்றும் அவர்கள் அந்த ஊறுகாயை தொடவில்லை .
---- 1 வாரம் கழித்து ----
" ப்ரோ , இன்னிக்கும் ஊறுகாயா ?" ஹரி சிரித்தான்.
"ஆமா ப்ரோ "
" உங்களுக்கு ஊறுகாய்னா ரொம்ப பிடிக்குமா ப்ரோ , sandwich கு கூட ஊறுகாய் சைடு டிஷ் சாப்பிடுவீங்க போல" விமல் கிண்டலடித்தான்.
கவின் கண்கள் கலங்கியது , முகம் அசௌகரியப்பட்டது .
விமலுக்கு ஏதோ போல் இருந்தது .
" சாரி ப்ரோ , i didn't mean to hurt you , சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் ".
கவின் விசும்ப தொடங்கினான்.
" அது எங்கம்மா செஞ்ச ஊறுகாய் ... இப்போ அவங்க என் கூட இல்ல "
கவினின் கண்ணீர் அவன் தாடி மயிரை நெருங்கியது.
கண்களை துடைத்து கொண்டு "இன்னிக்கு அவங்க செஞ்ச சாப்பாட சாப்பிட ஆசையா இருக்கு ஆனா முடியல ... அவங்க கடைசியா செஞ்ச ஊறுகாய் தான் மிச்சம் இருக்கு ... அவங்க நியபகமா அதை தான் சாப்பிட்டிக்கிட்டு இருக்கேன் " .
விமலின் தொண்டை குழி அடைத்தது .
" வீட்டு சாப்பாட்டுல ஹோட்டல் சாப்பாடு ருசி இருக்காது ப்ரோ ... ஆனா அதுல தான் சமைக்கரவங்களுக்கும் சாப்புடுறவங்களுக்கும் ஒரு பிணைப்பு இருக்கும் , அம்மா சமைக்குற சாப்பாட்டை எவ்ளோ சாப்பிட முடியுமோ அவ்ளோ சாப்பிட்டுக்கோங்க ... ஏன்னா " கவினால் மேற்கொண்டு பேச முடியவில்லை .
விமலும் ஹரியும் அவனை தேற்றினர்.
---- அடுத்த நாள் ----
" அம்மா லன்ச் கட்டுங்க "
" என்னாச்சு , திடீர்னு இன்னிக்கு லன்ச் " விமலின் அம்மா ..
" சும்மா ஒரு change க்கு தான் "
" இன்னிக்கு எதுவும் தொட்டுக்க செய்யல , வீட்ல முட்டை கூட இல்ல ஆம்லெட் போட"
" ஊறுகாய் இருக்கா ?" விமல் சிரித்தான்

