Saturday, June 9, 2018

ஆயா

" ஆயா செத்துட்டாங்க , சீக்கிரம் நீயும் தம்பியும் கெளம்புங்க ... "  அப்பா தழுதழுத்த குரலில் பேசி கைபேசியை அமர்த்தினார் ....


என்னிடம் பெரிதாக எந்த சலனமும் இல்லை ... இது நான் ஒரு மாதமாக எதிர்பார்த்தது தான் ... அலுவலகத்திற்கு இரண்டு நாள் விடுப்பு சொல்லி கிளம்பினேன்...

அவர்கள் பற்றி சிறு  சிறு நினைவுகளோடு அந்த டீசல் ஊர்தியில் பயணப்பட்டு கொண்டிருந்தேன் ...

"ணா கார செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்ட் பக்கம் நிறுத்துங்க  .. மாலை வாங்கணும் ..."

நள்ளிரவு மாலை கடைகள் இதற்காகவே அமைக்கப்பட்டிருக்கின்றன ...

"ணா அந்த  மாலை தாங்க " பேரம் எதுவும் பேசவில்லை ...

ஆயாவின் மீது எனக்கு எப்போதும் பெரிதான விருப்பம் இருந்தது கிடையாது .. வீணாக ஊர் சண்டை இழுப்பவர்களாகவும் , பெண் பிள்ளைகள் மீது மட்டும் பாசம் காட்டுபவர்களாகவும் , சீரியல் மாமியார் போல என் அம்மாவுடன் சண்டை போடுபவர்களாக மட்டும் தான் நான் பார்த்திருக்கிறேன் .... இடுப்பு எலும்பு உடைந்த அவர்களுக்கு பணிவிடை செய்ய என் அம்மா சென்றது மேலும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது ...


நான் அங்கு சென்றதும் அப்பா காரின் அருகே வந்தார் ... அழுது துடைத்த கண்கள் , சவரம் செய்யாத முகம் , பார்க்க வித்தியாசமாக இருந்தார்  ...


"மாலை எங்க "

"கார் டிக்கில "

"சரி போய் போடு "

பந்தல் போடப்பட்டு அதனடியில் குளிர் பதன பெட்டியினுள் ஆயா அடைக்கப்பட்டிருந்தாள் ....

பந்தலின் ஒரு முனை தளம் போட்ட வீட்டின் வெளி ஓரத்தில் அடிக்கப்பட்டிருந்தது ..

"சார்லஸு இந்த கூரை ஒழுகுது .... ஓடு மாத்தனும்ப்பா ... " ஆயா  8 வருடங்கள் முன்னர் கூறியது நினைவுக்கு வந்தது ...

சிவப்பு முந்தானை மஞ்சள் நிற புடவையால் சுற்றப்பட்டிருந்தாள் ...

நான் பந்தல் அருகே சென்றவுடன் அம்மா
" சார்லஸு , ஆயா நம்மள விட்டு போயிடிச்சுடா  ... அம்மா உன் பேரனுங்க வந்திருக்கானுங்க பாரு " ஒப்பாரி வைத்தாள் ...

அழ முயற்சித்து கொண்டிருந்தேன் ... 5 நிமிடங்கள் பின்னர் அங்கிருந்த பெண்கள் தாங்கள் அழுவதை  சிறிதே ஒத்தி வைத்தனர் ...


விடியற்காலை மூன்று மணி தூங்க முயற்சித்தும் தூக்கம் வரவில்லை ...

" மா ஆயா தூங்காம ஏதோ பெணத்திக்கிட்டு இருக்கு "

" பாவம் அது வலில ஏதாச்சும் சொல்லும் , நீ தூங்கு ... ஆப்ரேஷன் பண்ணவும் அந்த டாக்டர் பயப்படுறான் ..." அம்மா படுத்து கொண்டாள் ...


தண்ணீர் குடிக்க மீண்டும் எழுந்தால் , ஆயா  பேனாத்திக்கிட்டே இருந்தார்கள் .... கையை அவர்கள் பக்கம் கொண்டு போனேன் ... இறுக பற்றி எழ முயற்சித்தார்கள் ...

"ஆயா படுத்து தூங்கு .... "

ஏதோ சொல்லி கொண்டே இருந்தார்கள் .. ஒன்றும் புரியவில்லை ... சிறிது நேரம் கழித்து படுக்க சென்று விட்டேன் ....

இது நடந்து சரியாக ஒரு மாதம் இருக்கும் ... ஆயாவின் சத்தமற்ற அழுகை என்னை அசௌகரியப்படுத்தியது....

உறவினர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர தொடங்கினார்கள் ....


" அப்போல்லாம் ரொம்ப கஷ்டம்...  ஒரு மாட்டோட தொடய தலையில சுமந்திக்கிட்டு உங்க ஆயா செங்கல்பட்டு வரைக்கும் நடந்தே போயி அதை வித்து தங்கச்சி தம்பிகள காப்பாத்திச்சி  ... ரொம்ப கஷ்ட்டப்பட்டுச்சு......  இன்னொருத்தர் பத்தி எப்போவுமே புறம் பேசாது ... உங்கப்பா என்னை  திட்டுனாலும் , ஏன்டா அவல திட்டுற னு கேக்கும் .... எப்போ வந்தாலும் சோறு பொங்கி வைக்கும்  "  அம்மா கண் கலங்கினாள் ..

"எப்பா இந்த box தூக்கு , அக்கா மூஞ்சில மஞ்சள் தடவுறேன் ... " ஆயாவின் தங்கை ..

மேல் இருந்த மாலைகளை அகற்றி விட்டு அந்த பெட்டியின் மேல் பக்கத்தை திறந்தேன் ..


அத்தை பிள்ளைகள் வந்தவர்களை மோர் , டீ கொடுத்து கவனித்து வந்தனர் ... பெண் பிள்ளைகள் முகம் வாட்டமாய் இருந்தன...

சவ பெட்டி கொண்டுவரப்பட்டது ... அம்மா வீட்டு முறைகள் முடிந்ததும் , சரீரத்தை அந்த சவ பெட்டியினுள் வைத்தார்கள் ...

"சார்லஸு , நான் செத்தா அழுவுயாப்பா ..." எப்போதோ ஆயா கேட்டது நினைவுக்கு வந்தது ....


என்னையும் அறியாமல் 5 நிமிடம் தலையை குனிந்து அழுது கொண்டிருந்தேன் ....

அப்பா வேகமாக உள்ளே சென்று ஐநூறுக்கும் குறையாத சில்லறை காசுகளை கொண்டு வந்து பெட்டியினுள் இறைத்தார் ...


பெட்டி தூக்கும் சமயம் , அத்தைகள் ஓவென்று கதறி அழுதனர் ... தாத்தாவுக்கு கடைசியாக பாட்டியின் முகம் காண்பிக்க பட்டது ...


அத்தை மகன்கள் தெருவின் இருபுறமும் மாலைகளை உதிர்த்து கொண்டே வந்தனர்...

பெட்டி குழிக்குள் இறக்கி வைக்க பட்டது ... எப்பொதும் கடினமாக இருக்கும் அப்பா  அன்று இளகி இருந்தார் .... தூரத்து சொந்தம் ஒருவர் வீட்டை கழுவி சுத்தப்படுத்தி வைத்திருந்தார் ...


அன்று மாலை ஆயாவின் புகைப்படம் வைக்கப்பட்டு அதன் முன்னர் அவர் துணிகள் , அவர் நகைகள் மற்றும் பூ வைக்கப்பட்டிருந்தன ...

அப்பா அந்த புது பூஸ்ட் பாட்டிலை " எங்கம்மாவுக்கு பூஸ்டு னா ரொம்ப பிடிக்கும்" சொல்லி அதை புகைப்படத்தின் முன்பு வைத்து விட்டு சென்று விட்டார் ...

"என்னை புள்ள மாதிரி ஆயா பாத்துகிச்சி " மாமா பம்பு செட் அருகினில் கலங்கினார் ...


அடுத்த நாள் கல்லறையை மொழிகி ஊருக்கு கிளம்பினோம் ...

வாசலருகே நின்று ஆயா வழி அனுப்புவது ஞாபகம் வந்தது ...

 " அடிக்கடி வந்து போங்கப்பா, இங்க நானும் இந்த கிழவனும் தான் இருக்கோம் , மலாட்ட பயிறு இன்னும் கொஞ்சம் கொண்டு போறியா.... "


கூன் விழுந்த முதிர்ந்த உயிர்கள் சுயநலமற்றவை ...

அன்பிற்கு மட்டும் ஏங்கி திரியும் அவர்களை உங்கள் சந்திப்பினால் சிறிது காலம் வாழ வையுங்கள் ...














































No comments:

Post a Comment