Wednesday, September 26, 2012

புகைப்படங்கள்

உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய புகைப்படங்களின் தொகுப்பு தான்  இந்த பதிவு .


உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் :


அக்டோபர் 9 ம் தேதி 'சேகுவேரா' வின்  இறப்புக்கு பின்னர் உலகத்தில் உள்ள நாளேடுகள் தங்கள்  முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்திய படம் .

தனிமையாக்கப்பட்ட தாய் 






கணவனை இழந்து , தன்னுடைய ஏழு பிள்ளைகளுக்காக தன் வண்டியின்
சக்கரங்களை விற்று எதிர்காலத்தை குறித்து கவலையோடிருக்கும் ஒரு தாயின் சோக உணர்வுகளை வெளிபடுத்திய புகைப்படம் .

தனி மனிதனின்  போராட்டம் 





சீன 'தாங்கி'களின்  முன் நின்று வன்முறைக்கெதிரான தன் குரலை தைரியமாக எழுப்பிய ஒரு தனி மனிதனின் புகைப்படம் .


'எலிசபெத் எக்போர்ட்' இன்  துணிச்சல் நடை





எலிசபெத் எக்போர்ட் தென் அமெரிக்கா வில் உள்ள சென்ட்ரல் உயர் நிலை பள்ளியில் முதன் முதலாக அனுமதிக்கப்பட்ட கறுப்பின பெண் .
வெள்ளை மாணவர்கள்  கூச்சலிட துனிச்சல்லோடு தன் வகுப்புக்கு வீர நடை போடும் எக்போர்டின் புகைப்படம் இது .


முஹம்மது ஹலியின்  மரண குத்து 






முதல் சுற்றுலயே எதிரியை விழ்த்தும் ஹலியின் குத்தை விளக்கும் படம் .விழுந்து கிடப்பவர் பிரபல குத்து சண்டை வீரர் சோனி  லிஸ்டன் .


உலக உதயம் 




அப்போல்லோ 8 விண்கலத்தில்  நிலவுக்கு பயணம் செய்த பில் அண்டெர்ஸ் என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது . இந்த புகைப்படம் உலகத்தை குறித்து மக்கள் கொண்டிருந்த உருவகத்தை மாற்றி போட்டது .


அபு குராஇப் சிறைச்சாலை





ஈராக் இல் உள்ள அபு குராஇப் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்படும் கொடுமைகளை உலகிற்கு காட்டிய புகைப்படம் .

பிர்மின்காம் அடிகள்




பிர்மின்காமில் சம உரிமை கேட்டு போராட்டம் நடத்திய கறுப்பினத்தவர்களை தண்ணீர் பாய்ச்சி வெளியேற்றியதை விளக்கும் புகைப்படம் . இந்த புகைப்படத்தை பார்த்த பின்னர் தான் போராட்டம் அலைகள் போல வலுபெற்றது .

Truman  இன்  வெற்றி :




"The Chicago Tribune " என்ற  அமெரிக்க நாளிதழ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிக்கு முந்தைய முடிவை கொண்டு தன்னுடைய தேர்தல் பதிப்பை வெளியிட்டது . அதில் truman தேர்தலில் தோற்றார் என்று அறிவித்தது . ஆனால் இறுதி முடிவின் படி truman  தேர்தலில் வெற்றி பெற்றார் .தவறான செய்தியை அச்சிட்ட பத்திரிக்கையை கையில் கொண்டு truman இருக்கும் இந்த புகைப்படம் உலக புகழ் பெற்றது .


பிரபாகரன் மரண புகைப்படம்



இந்த புகைப்படத்தில் இருப்பது பிரபாகரன் தான் , இல்லை பிரபாகரன் இல்லை , என பல சர்ச்சைகளை எழுப்பிய பிரபாகரனின் மரண புகைப்படம் இது .


குறிப்பு : இன்னும் பல உலக புகைப்படங்கள் அடுத்த பதிவில் 

Monday, September 17, 2012

கலாய்


கேலி , கிண்டல் , ஓட்டுவது , பலப் தருவது போல சமீப காலமாக இளைஞ்சர்கள் மத்தியில் பெரிதாக பயன்படும் வார்த்தை "கலாய்ப்பது" .

 18/9/2012 அன்று விஜய் தொலைக்காட்சியில்  'ஆண்-பெண் கலாய்த்தல்'  என்ற தலைப்பில் ஒளிப்பரப்பாகிய "நீயா - நானா " நிகழ்ச்சியின் கருத்து பதிவு தான் இது .



ஆணும் பெண்ணும் எவ்வாறு ஒருவரையொருவர் கலாய்த்து கொள்வீர்கள் என்ற கேள்வியோடு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது . இருபாலரும் மாறி மாறி தாங்கள் எவ்வாறு மற்றவர்களை கலாயப்போம் என்று  கூறினர் . ஆண்களை விட பெண்களே கலாய்ப்பதில் சிறந்து விளங்கினர் . பொதுவாக இவர்கள் மற்றவர்களை கலாய்க்க பயன்படுத்துவது சினிமா வசனங்களே .

தங்களை எரிச்சலடைய செய்யும் கலாய் எவை ? , தாங்கள் எவ்வாறு மற்றவர்களால் கலாயக்கப்பட்டிர்கள் ? போன்ற  கேள்விகள் கேட்கப் பட்டது . நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் தங்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர் . நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதால் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை .


இறுதியாக தாங்கள் யாரை எல்லாம் கலாய்க்க விரும்புகிறீர்கள் ? என்று கேட்கப் பட்டது .



பெரும்பாலானோர் தாங்கள் " மிக ஒல்லியாக இருப்போரையும், கருப்பாக 
இருப்போரையும், உடல் பருமனானவர்களையும் , உயரத்தில் மாறுப்பட்டு இருப்பவர்களையும்  எளிதில் கலாய்த்து விடுவோம் " என்று கூறினர் .
வேறு சிலர் " எளிதில் உணர்வுகளை வெளிக்காட்டகூடியவர்களை 
கலாய்க்க விரும்புவதாகவும் " கூறினர் . மற்றும் சிலர் " மொழி தெரியாதவர்களை கலாயப்பதாகவும் " கூறினர் .

" என்னடா இது இவங்களுக்கு பஞ்சாயத்து பண்ண வேறு தலைப்பே இல்லையா  , இப்படி தேவை இல்லாத விஷயத்தை குறித்து எதுக்கு பேசனும்" ன்னு கேள்வி எழுந்தது . இதற்கான விடை விளம்பர இடைவேளைக்கு பின் தொடர்ந்த நிகழ்ச்சியில் கிடைத்தது  .

Thursday, September 13, 2012

என் நண்பனை காணவில்லை





பலருக்கு பிடிக்காததாலோ  என்னமோ
என்னிடம் மிக நெருக்கமாய் இருந்தான் !

இன்று காணவில்லை !

சிறு வயது முதல் என்னுடன் வளர்ந்தவன்
சொல்லாமல் சென்று விட்டான் !

அவன் காணமல் போனது மற்றவர்களுக்கு
மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது  !

எங்கு சென்று விட்டாய் நண்பனே !

என் படிப்பில் , விளையாட்டில்
என் எல்லா புது முயற்சியிலும் உடனிருந்தவன் !

இன்று காணவில்லை !

மொழி , இனம் , மத வேறுபாடின்றி
அன்பாய் பழுகுபவன் !

இது தான் உலகம் என்று
உண்மை நிலை காட்டியவன் !

இன்று காணவில்லை !

வேறு யாருடனோ தங்கிருக்கிறான்
நிச்சயம்  ஒரு நாள் வருவான் !

ஞானம் , அன்பு , உண்மை நிலையை போதித்து
என்னை மீண்டும் புதுப்பிப்பான்!

என் நண்பனின் பெயர் "வழிக்காட்டி "
மற்றவர்கள் ஏனோ " தோல்வி " என்று அழைக்கிறார்கள் .

                                                                                                                 



                                                                                                                      - சார்லஸ்
                                                       

Friday, September 7, 2012

'நான்' - பட விமர்சனம்


நண்பர்கள் மற்றும் ஊடகங்கள் பாராட்ட கேட்டு கடந்த வாரம் விஜய் அன்டனி தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளி வந்திருக்கும் " நான் " திரைப்படம் பார்த்தேன் .

சிறு வயதில் தன் அம்மாவின் ஒழுங்கினமான செயலால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு தள்ளபடுகிறார் கார்த்திக் . படிப்பின் மீது நிறைய ஆர்வம் கொண்ட கார்த்திக் , சீர்திருத்தப்பள்ளியில் இருந்தபடியே தன் படிப்பை தொடர்கிறார் . விடுதலை ஆகி வெளியே வரும் அவர் தன்னுடன் பயணம் செய்து எதிர்பாரதவிதமாக விபத்தில் பலியான சல்மான் என்பவற்றின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரிக்குள் நுழைகிறார் .

அங்கு அவரிடம் பணக்கார வீட்டு பிள்ளையான அசோக் நண்பராகிறார் .
தன் வீடு வாடகை கட்ட இயலாததால் கார்த்திக்(சல்மான்) அசோகுடனே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது . ஒரு கட்டத்தில் அசோக்கிற்கு  தன்னுடன் தங்கியிருப்பவன் சல்மான் இல்லை என்ற உண்மை தெரிய வருகிறது . அப்பொழுது ஏற்ப்பட்ட கை தகராறில் அசோக் பரிதாபமாக உயிரிழக்கிறார் .

அசோக்கின் உடலை புதைத்துவிட்டு , கார்த்திக் (சல்மான்) அசோக்கின் குரலில் பேசி அசோக்கின் நண்பர்களையும் , பெற்றோரையும் சமாளிக்கிறார் . ஒரு கட்டத்தில் அசோக் காணமல் போய்விட்டார் என்கிற சந்தேகம் போலீசிற்கு வர , கார்த்திக் படிப்பை தொடர்ந்தாரா இல்லையா என்பதே ' நான் ' திரைபடத்தின் மீதி கதை .

படத்தில் குறிப்பிட்டு கூற வேண்டிய விஷயங்கள் ஜீவா ஷங்கரின் கதை மற்றும் திரைக்கதை , அடுத்த காட்சி என்ன வென்று ரசிகர்களை ஊகிக்க
முடியாமல் செய்திருப்பதே  படத்தின் மிக பெரிய பலம்  .

விஜய் அன்டனி  கார்த்திக்காக வாழ்ந்திருக்கிறார் . சித்ததர்த்தை   போல
மிமிக்ரி செய்வதாகட்டும் , ATM இல் பணம் எடுக்கும் பொது  கடவு எண்ணை  மறைமுகமாக நோட்டமிடுவது , தன் போலி அப்பாவையும் தன்னை சீண்டும் கல்லூரி சீனியரையும் ஒரு சேர தாக்குவது என தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கான தன் முத்திரையை  பலமாய் பதித்திருக்கிறார் .


நடிப்பு மட்டுமல்லாது இசை மற்றும் பின்னணி இசையிலும் நம்  மனதை கவர்கிறார் விஜய் அன்டோனி  சபாஷ் !!!

ரூப மன்சுரி , அனுயா , கிருஷ்ணமூர்த்தி , சித்தார்த்தின் பெற்றோர் , சீர்திருத்த பள்ளி வார்டன் , சல்மானின் வயதான தந்தை என அனைவரும் பாத்திரம் அறிந்து பளிசிட்டிருக்கின்றனர் ..

கிளைமாக்ஸ் காட்சி படத்தை தூக்கி நிறுத்துகிறது .

மொத்தத்தில் " நான் " நம் மனதில் நிற்பவன் .

Thursday, September 6, 2012

தற்கொலை


சென்ற பதிவில் என் முதல் கதை " தற்கொலை " யை பதிவு செய்கிறேன் என்று கூறியிருந்தேன்  . அதன்படி இதோ என் முதல் கதை .

குறிப்பு : தயவு செய்து இதயம்  பலவீனமானவர்கள் , கர்ப்பிணி பெண்கள் , சிறுவர்கள் இந்த கதையை படிக்க வேண்டாம் .








நம்ம கதையோட ஹீரோ மிக  பெரிய எழுத்தாளர் . எல்லோரும் பேப்பர் இல்லாம கதை எழுதறவங்கள பாத்திருபிங்க , பேனா இல்லாம கதை எழுதறவங்கள  பாத்திருபீங்க ஆனா நம்ம ஹீரோ கதையே இல்லாம கதை எழுதுவாரு .

சின்ன வயசில் இருந்தே  தனக்குள்ள தூங்கிகிட்டு இருந்த கவிஞ்சனை ஒரு கட்டத்தில் எழுப்ப வேண்டியதாயிற்று . ஒரு நாள் கல்லூரியில் தமிழ் பேராசிரியர் ' அம்மா ' என்ற தலைப்பில் கவிதை எழுத சொன்னார் . எல்லோரும் தங்கள் அம்மாவை வானம் , மலை , பூமி யோடு ஒப்புமைபடுத்தி முயற்சித்து கொண்டிருக்கையில் நம்ம ஹீரோவோ அம்மாவின் புகழ் பாடும் சினிமா பாடல்களில் இருந்து வரிகளை சுட்டு தன் கவிதையில் சொருகி கொண்டிருந்தார் .

அந்த பேராசிரியர் சினிமா அதிகம் பார்க்காதவர்  போல " பராவா இல்ல  ரொம்ப நல்லா எழுதி  இருக்கியே , உனக்கு இலக்கிய துறையில நல்ல வாய்ப்பு இருக்கு"  என பாராட்ட அன்றைக்கு ஆரம்பிததுங்க நம்ம ஹீரோ வோட முதல் இலக்கிய  அத்தியாயம் .



தினமும் கவிதை , கட்டுரை , கதைன்னு எதாவது எழுதி கிறுக்கி தள்ளி கிட்டே இருப்பாரு . அட அதை கூட தாங்கிக்கலாம், ஆனா தான் எழுதிய மொக்கையை படிக்க சொல்லி மத்தவங்கள தொந்தரவு செய்வார் பாருங்க அதை தான் தாங்க முடியாது .

வேலை பார்க்கிற இடத்தில கூட blog ல கதை எழுதறேன் , கட்டுரை எழுதறேன்னு சொல்லி அலுவலக நேரத்தை வீண் அடித்து கொண்டிருப்பார் .

இவரு பண்ற அட்டகாசத்த தாங்க முடியாம இவர பார்த்தாலே இவரோட நண்பர்கள் எல்லாம் தல தெறிச்சி  ஓட ஆரம்பிச்சிட்டாங்க .
அலுவலகத்தில்  இவர வேளையில் இருந்து தூக்கிட்டாங்க .

ரொம்ப மனசு ஒடிந்து போன நம்ம ஹீரோ தற்கொலை பண்ணிக்கிட்டாரு .




அப்போ கூட நம்ம ஹீரோ சும்மா இல்லைங்க , "நேரா எழுதினா தானே திட்டுறாங்க , நம்ம இன்னொருத்தர் உடம்பில் இருந்து எழுதுவோம் " என்று ஒரு அப்பாவி உடம்பில் புகுந்து எழுத  அராம்பிச்சிட்டாறு .

இதோ அவர் எழுதிய இன்றைய கதையின் முதல் வரி

 "நம்ம கதையோட ஹீரோ மிக  பெரிய எழுத்தாளர் .  எல்லோரும் பேப்பர் இல்லாம கதை எழுதறவங்கள பாத்திருபிங்க , பேனா இல்லாம கதை எழுதறவங்கள  பாத்திருபீங்க ஆனா .................................."


Tuesday, September 4, 2012

என் முதல் கதை


 " சொந்தமா வலைபக்கமெல்லாம் தொடங்கியாச்சு  , ஆரம்பிச்சா மட்டும் போதுமா தினமும் எதாவது பதிவுகளை போடணும் " னு  நண்பர்கள் உசுபேத்தியத்தில் என்னுடைய முதல் கவிதையை   பதிவு செய்தேன் .

"ஆஹா ஓஹோ "ன்னு பாரட்டலனாலும் நல்ல முயற்சின்னு எல்லோரும் சொன்னதால  , ஏன் அடுத்த முயற்சியா ஒரு சிறு கதை எழுத கூடாதுன்னு
ஒரு எண்ணம் தோன்றியது  , அதன் விளைவு தான் என் முதல் கதை.

"சிறு கதை எழுதனுமுன்னு  ஆயாச்சு , எதாவது புதுசா   யோசிச்சு எழுதணும்  , அதே நேரத்தில் அதில் மக்களுக்கு   நல்ல கருத்தும் இருக்கனமுன்னு " யோசித்ததில் தலை வலி தான் வந்தது , புது எண்ணம் எதுவும் தோன்றவில்லை .


" சரி எதாவது சிறுகதை எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்தாலாவது புது எண்ணம் கிடைக்கும்"  என்று சுஜாதா , அகிலன் ஆகியோரது சிறுகதைகளை படிக்க ஆரம்பித்தேன் .

அவர்கள் கதைகளில் வரும் உவமைகளும் , வார்த்தை ஜாலங்களும் எவ்வளவு முயற்சி செய்தும் என் கதையில் அமைக்க முடியல . மேலும் அவர்கள் கதைகள் ஏற்படுத்திய தாக்கத்தாலோ என்னமோ புது எண்ணங்கள் தோன்றாமல் அவர்கள் கதைகளை தழுவிய கற்பனைகளே உதித்தன .



"அட போப்பா இதெல்லாம் நம்மால முடியாது " ன்னு  மனசு ஒரு பக்கம் வடிவேலு மாதிரி வசனம் பேசினாலும் " நீ என்ன சின்ன வயசுல இருந்தே சிறு கதை படிச்சா வளந்த , நிறைய சினிமா பாரு எதாவது புது எண்ணம் கிடைக்கும் " ன்னு இன்னொரு பக்கம் விஜயகாந்த் போல வறண்டு பிடித்தது .


தமிழிலிருந்து , தெலுங்கு , ஹிந்தி , ஆங்கிலம் என அனைத்து மொழி திரைப்படங்களும் பார்த்ததில் உண்மையாகவே புது எண்ணம் உருவாகியது .

"இந்த முறை கதைய கண்டிப்பா முடிச்சிறனும் "ன்னு எழுதியதில் 'என் முதல் கதை'  ஒரு சில எழுத்து பிழைகளுடன் நன்றாகவே இருந்தது.
கதையை  மீண்டும் ஒரு முறை படித்து பார்க்கும் போது பெருமிதத்துடன் கூடிய ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது .

"கதை நல்லா வந்திருக்கு , நாளைக்கு ப்ளாக் ல போட்டுருவோம்  , யாரவுது  நம்ம கதைய படிச்சுட்டு பத்திரிக்கைல தந்துட்டங்கனா , அப்புறம் மாநில விருது , தேசிய விருது , நோபில் பரிசு ..... அதுக்கப்புறம் சினிமால கதை எழுத கூப்பிடுவாங்க , கண்டிப்பா ரஜினிக்கு ஒரு கதை எழுதனும் ..... அப்புறம் ஆஸ்கார் இதோ ரஹ்மான் உங்க கூட நானும் வரேன் "   மனம் கற்பனை வானில் சிறகடிக்க ஆரம்பித்தது .

" எதுக்கும் நம் நண்பர்களிடம் ஒரு முறை காட்டி நம்மை அவர்கள் புகழ்வதை காதால்   கேட்டு கொள்வோம் " என்று தமிழ் தெரிந்த நண்பர்களிடம் காட்டினேன் .

" மச்சி என்னடா கதை மொக்கையா இருக்கு , உனக்கு எதுக்குடா இந்த வேல " என்று வெளிப்படையாக சில நண்பர்களும் " பரவாயில்ல நல்லா இருக்கு ஆனா ஏதோ குறையற மாதிரி இருக்கு " ன்னு  நாசூக்காக சில நண்பர்களும் " டேய் இது ஒரு படத்தோட கதை யார யாமத்த பாக்குற போ " ன்னு சில துப்பறியும் நண்பர்களும் என் கதைக்கான விமர்சனத்தை வாரி வழங்கினர் .


"அவ்வளவு மோசமாவா எழுதியிருக்கோம் , ச்சே நல்ல வேல ப்ளோக்ல போடல " என்று என்னை திட்டி கொண்டே என் ஆஸ்கார் கனவுகள் கரைந்தன .

என் கதையோட பெயரை சொல்ல மறந்துட்டேன  பெயர் " தற்கொலை " .




குறிப்பு :

என் முதல் கதை "தற்கொலை "யை  அடுத்த முறை பதிவு செய்றேன் .
நீங்களாவது படிச்சிட்டு நல்ல கருத்தா சொல்லுங்க .









பெற்றோர்




ஒருவராய் இருவராய் 
ஓராயிரம் கனவுகள் சுமந்து

பெண்நேனினும் ஆண்நேனினும் 
பொறுப்பாய் வளர்த்து

அன்பினில் அளவு காணாமல்
அதிகமாய் அளித்து

சுயம் சுகம் யாவும் உன்
சுகம் காண தொலைத்து

உழைப்பின் பலனையெல்லாம் 
உன் உயர்வில் அமைத்து

இல்லறம்  இன்பமாக 
இனிய துணை கண்டு

மரண  நாள் வரை உன்
மக்களுக்காய் வாழ்ந்து 

சுடுகாடு சென்றும் உன் நினைவால் வாடும் 
சுயநலமில்லா மக்கள்








நாங்களும் கவிதை எழுதுவோம்ல 

முதல் முயற்சி , எதாவது தப்பிருந்தா மன்னிச்சிக்கோங்க