Tuesday, January 15, 2019

இடதுகையின் இருப்பிடம்


சென்னை தன் நவீன குழந்தையை பிரசவித்திருந்தது .

இந்த யுகத்தின் தொட்டியில் அந்த பிள்ளை தவழ தொடங்கியிருந்தது .. அதன் கரு பல மனித விந்துகளின்  உழைப்பை உறிஞ்சி ஊட்டம் பெற்றது.



நவீன சென்னை குப்பங்களை புடமிட்டு அதின் நிலங்களை மட்டும் தன் அகத்தே கொண்டது.

குப்பங்கள் தென் சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளாய் உருவெடுத்திருந்தன ...

சென்னை தன் இந்த பிள்ளையை வளர்த்தெடுக்கவும் பூர்விகவாசிகளை அங்கு அமர்த்தியது .

ஆக்கிரமிப்பு என்ற ஒற்றை சொல்லில் அவர்களின் 500 ஆண்டு அடையாளத்தை அவமானப்படுத்தி ,  சுதந்திர அகதியின் மனநிலையோடு அவர்களை உலாவ விட்டது .


" டேய் பாலா நாளைக்கு நாங்க எங்க அம்மா வேல செய்யுற கம்பெனிக்கு போறோமே ..."
அன்பு கல்லோடு இணைக்கப்பட்ட அந்த மாஞ்சா பூசப்பட்ட நூலை சுற்றியவாறு தன் நண்பனிடம் பேசி கொண்டிருந்தான் .

" அங்க பெரிய ஆஃபீஸ் இருக்கும் , அப்புறம் ..அப்புறம் அங்க நெறய மரம் இருக்கும் , நெறய சாப்பிட கிடைக்கும் ... " அன்பு பெருமிதத்துடன் தன் நண்பனிடம் .

" டேய் அங்க 10 மாடி இருக்குமா ... "

"இல்ல எங்க அம்மா சொன்னாங்க அங்க 20 மாடி இருக்குமா , அங்க இருந்து பாத்தா நம்ப வீடுலாம் தெரியும் , நான் அங்கிருந்து உன்னை பாப்பேனே .." அன்புவின் நாக்கோடு உதடு தாளம் போட்டது.

"டேய் உங்க அப்பா வறார் டா" பாலா உஷார்படுத்தினான் .


" அப்பா .." என்று கத்திக்கொண்டே அன்பு குணாவை பின் தொடர்ந்து  ஓடினான்.

குணா ...நீங்கள் முப்பது வயதுடைய , ஒல்லியான ஒரு கட்டிட வேலை செய்பவனை கற்பனை செய்தால் அதற்கு சற்றும் மாறாமல் தோற்ற அமைப்பை உடையவன் .

 விற்பனை நிறுத்தப்பட்ட அந்த டி வி எஸ் சாம்ப் , இவன் வரவை அந்த குடியிருப்பு முழுவதும் தண்டோரா அடித்தது. இவனை காட்டிலும் அதிகமாய் அது சுரண்டப்பட்டிருந்தது ....

குணா தன் சட்டையை  அவிழ்த்து கொடியில் போட்டான் ..அதன் பை இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒருசேர பார்த்ததில்லை ...

லுங்கிக்கு அடியில் கையை விட்டு தன் அரைக்கால் சராயை உருவி கொடியில் போட்டான் .


"  ஏய் அன்பு... வூட்ல இல்லாம எங்க போயி சுத்திட்டு வர "

கதவோரம் அன்பு சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

" வெளிய பாலா கிட்ட பேசிக்கினிருந்தேன் பா .."

" சாப்பிட்டியா"

"ம்ம்"

" அம்மு எங்க ... "

"அது மேல் வீட்டு அக்கா கூட கடைக்கு போயிருக்கு "


குணா பாய் விரித்து ஒரு துண்டை தலைக்கு வைத்து படுத்தான் ..

" அவளை வெளிய போவ கூடாதுனு சொல்லி இருக்கேன்ல ... வரட்டும் இன்னிக்கு பேசிக்கிறேன் ...  "


குணா குப்புற படுத்தான் .. மணி ஆறு தாண்டி இருக்கும் ...

"நைனா.. வந்து அப்பா முதுகை மிதி டா"

அன்பு அந்த நூல் பத்தையை ஓரம் வைத்து விட்டு குணா முதுகில் ஏறினான்... குணாவின் முதுகு சுமைகளின் பிடிப்பை சற்றே தளர்த்திக்கொள்ள காத்திருந்தது.

" அன்ப ... நாளைக்கு நீயுமா உங்கம்மா கூட போற .."

அன்பு சற்றே அதிர்ச்சியுடன் ..

" ஆமப்பா ... அம்மு இங்கேயே இருக்கட்டும் .. நான் போறேன்"


அம்மு கையில் கொஞ்சம் மல்லி மொட்டுகளை ஏந்தியவாறு உள்ளே நுழைந்தாள் ..

"ஏய் எங்க வூடுன்னு தங்காம வூர் சுத்திட்டு வர "

" நம்ம கவிதா அக்கா தான் கடைக்கு கூப்பிட்டிச்சு ...  அதான்கூட போயிட்டு வரேன் "

"என்னது கையில"

"அக்கா பூ வாங்குச்சா , அதுல கொஞ்சம் அம்மா கிட்ட தர சொல்லிச்சு "

"சரி அதை வச்சிட்டு வா , வந்து கால மெறி "

அம்மு ஒரு பாத்திரத்தை எடுத்து .. அந்த மொட்டுகளை அதில் கொட்டினாள்..

அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை ஊன்றியவாரே அவன் கால் மீது ஏறினாள் ...


" அம்மு சாப்பிட்டியா"

"ம்ம் சாப்பிட்னே"


" அம்மு நாளைக்கு அம்மா கூட  நீயும் போறியா ... அண்ணன் போவட்டும் .. நீ இருக்கியா .."

வெளியே காய்கறி விற்கும் வண்டி சத்தம் கேட்டது ..


"இல்ல நான் போவேன் ... அவனை இருக்க சொல்லு "

" நானும் போவேன் "


" சரி..சண்டை போடாதீங்க .. ரெண்டு பேரும் போங்க ... எங்க உங்கம்மா ஆள காணோம் ..."

பக்கத்து தெரு மாரியம்மன் கோவில் ஒலி பெருக்கி ஒலி எழுப்ப தொடங்கியது ...  எல். ஆர் . ஈஸ்வரி பாட ஆரம்பித்தார்...


--தொடரும்














  

Sunday, September 2, 2018

ஊறுகாய்



"அம்மா என்னம்மா கீரை பொரியல் வச்சிருக்கீங்க " உணவு இடைவேளையில் டிபன் பாக்ஸை திறந்து பார்த்த விமல் அவன் அம்மாவை அழைத்தான்.

" டேய் ஒரு நாளு தான்டா , அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடு " அம்மா எதிர்முனையில் .


" என்னது ஒரு நாளா , இந்த வாரத்தில் இது மூன்றாவது நாள் , atleast ஆம்லெட் ஆவது செய்ய வேண்டியது தானே  "

"சரி ஒரு நாள் சாப்பிட்டுக்கோ, நாளைக்கு செய்றேன் "

"சரி வைங்க " இணைப்பை துண்டித்தான் .


" வாங்க ப்ரோ நாம share பண்ணிக்கலாம்"  .


ஹரி அஞ்சப்பரில் இருந்து உணவு வரவழைத்திருந்தான்

விமலுக்கு ஆசை இருந்தாலும்  அஞ்சப்பர் சிக்கன் தந்தூரியுடன் பண்டமாற்றம் செய்ய அவன் அம்மா செய்த சிறுகீரை கூட்டு  தகுதியிழந்ததாக தெரிந்தது.

முறையற்ற பரிமாற்றம் செய்ய அவன் சம்பாத்திய சுயமரியாதை அவனை தடுத்தது .

"இல்ல ப்ரோ , இன்னிக்கு புதன்கிழமை நான் முட்ட மட்டும் தான் சாப்புடுவேன் " விமல் சமாளித்தான்.

--- அடுத்த நாள் ---


"டேய் lunch கொண்டு போடா " அம்மா கூப்பிட்டாள்.

"இல்லம்மா நான்  வெளியில சாப்பிட போறேன் ".

அம்மா எதுவும் பேசிக்கொள்ளவில்லை .

" ப்ரோ இன்னிக்கு நீங்க ஆர்டர் பண்ணும் போது எனக்கும் சேர்த்து பண்ணுங்க .." ஹரியிடம் சொன்னான் .

"சூப்பர் ப்ரோ , நான் ஆர்டர் பன்றேன்"

யா மோஹிதீன் பிரியாணியின் சுவை அவன் நாவில் ஒட்டி கொண்டது .

ருசி கண்ட பூனையாய் விமல் தினமும் வெளியே சாப்பிட தொடர்ந்தான் .

அவனுடன் பணிபுரிபவர்களும் வெளியே உணவு வாங்கி சாப்பிடும் வழக்கத்தையே கொண்டிருந்தனர்.

டீம் லன்ச் , பர்த் டே ட்ரீட் , ஆன்சைட்டில் இருந்து வருபவர் வாங்கி தரும் ஓசி சோறு என அடிக்கடி வெளியே சென்று சாப்பிடும் விமலுக்கு OMR சாலையில் உள்ள அத்தனை உணவகங்களும்  பரிச்சயம் .

----- 6 மாதங்களுக்கு பிறகு -----


கவின் புதிதாக விமலின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்திருத்தான் .

கவினின் நேர்மையும் , எதையும் கற்று கொள்ள விரும்பும் ஆர்வமும், தன்மையான குணமும் எல்லோருக்கும் அவன் மேல் ஒரு ஈர்ப்பை உண்டுபண்ணியது.

ஒரு நாள் நள்ளிரவு வரை இருந்து கவின் விமலுக்கு உதவியது , அவனுக்கு கவினின் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டு பண்ணியது .


" கவின் , lunch க்கு வரீங்களா " விமல் அழைத்தான் .

கவின் ஆரம்பத்தில் அவர்களுடன் செல்ல தயங்கினான் , ஆனால்
விமலின் வற்புறுத்தலால் அவர்களுடன் சென்றான் .

விமல் , ஹரி மற்றும் கவின் சாப்பிட அமர்ந்தனர் .

விமலும் ஹரியும் புதிதாக அவர்கள் அலுவலக கேன்டீனில்  திறக்கப்பட்ட பிரியாணி கடையில் இருந்து சிக்கன் 65 பிரியாணி வாங்கி வந்தனர்.

கவின் அவன் கொண்டு வந்ததை எடுத்து வெளியே வைத்தான்.

சாம்பார் சாதம் , வெண்டைக்காய் பொரியல் ,  ஒரு சிறு டப்பாவில்  மாங்காய் ஊறுகாய் .

" கவின் , நீங்க வெஜ்ஜா " ஹரி விசாரித்தான்.

"இல்ல ப்ரோ , நான்-வெஜ் "


ஹரி எதற்கு இந்த கேள்வி கேட்டான் என்று கவினுக்கு புரிந்தது .

கவினின் வெண்டைக்காய் பொரியலும் அவர்களின் சிக்கன் 65 ம் பகிரப்பட்டது.

"அது என்ன மாங்கா ஊறுகாயா " விமல் கேட்டான் .

" ஆமா ப்ரோ " விமல் கேட்காமலே கவின் அதில் கொஞ்சம் எடுத்து அவர்கள் தட்டில் வைத்தான்.

விமலும் ஹரியும் அந்த ஊறுகாயை தொடவே இல்லை , வெண்டைக்காய் பொரியலை மட்டும் கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டனர்.

அடுத்த நாள் கவின் மீன் குழம்பு கொண்டு வந்திருந்தான் கூடவே ஊருகாயும் .


இன்றும் அவர்கள் அந்த ஊறுகாயை தொடவில்லை .

---- 1 வாரம் கழித்து ----

" ப்ரோ , இன்னிக்கும் ஊறுகாயா ?" ஹரி சிரித்தான்.

"ஆமா ப்ரோ "

" உங்களுக்கு ஊறுகாய்னா ரொம்ப பிடிக்குமா ப்ரோ , sandwich கு கூட ஊறுகாய் சைடு டிஷ் சாப்பிடுவீங்க போல" விமல் கிண்டலடித்தான்.

கவின் கண்கள் கலங்கியது , முகம் அசௌகரியப்பட்டது .

விமலுக்கு ஏதோ போல் இருந்தது .

" சாரி ப்ரோ , i didn't mean to hurt you , சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் ".


கவின் விசும்ப தொடங்கினான்.

" அது எங்கம்மா செஞ்ச ஊறுகாய் ... இப்போ அவங்க என் கூட இல்ல "

கவினின் கண்ணீர் அவன் தாடி மயிரை நெருங்கியது.

கண்களை துடைத்து கொண்டு "இன்னிக்கு அவங்க செஞ்ச சாப்பாட  சாப்பிட ஆசையா இருக்கு ஆனா  முடியல ... அவங்க கடைசியா செஞ்ச ஊறுகாய் தான் மிச்சம் இருக்கு ... அவங்க நியபகமா அதை தான் சாப்பிட்டிக்கிட்டு இருக்கேன் " .

விமலின் தொண்டை குழி அடைத்தது .

" வீட்டு சாப்பாட்டுல ஹோட்டல் சாப்பாடு ருசி இருக்காது ப்ரோ ... ஆனா அதுல தான் சமைக்கரவங்களுக்கும் சாப்புடுறவங்களுக்கும் ஒரு பிணைப்பு இருக்கும் , அம்மா சமைக்குற  சாப்பாட்டை எவ்ளோ சாப்பிட முடியுமோ அவ்ளோ சாப்பிட்டுக்கோங்க ... ஏன்னா " கவினால் மேற்கொண்டு பேச முடியவில்லை .


விமலும் ஹரியும் அவனை தேற்றினர்.


---- அடுத்த நாள் ----

" அம்மா லன்ச் கட்டுங்க "

" என்னாச்சு , திடீர்னு இன்னிக்கு லன்ச் " விமலின் அம்மா ..

" சும்மா ஒரு change க்கு தான் "

" இன்னிக்கு எதுவும் தொட்டுக்க செய்யல , வீட்ல முட்டை கூட இல்ல ஆம்லெட் போட" 



" ஊறுகாய் இருக்கா ?" விமல் சிரித்தான்



Saturday, July 14, 2018

காதலாட .... காதலாட ... - 2


 ஜான் : " ஏ பிரமி நான் சொல்றேன் , நீ first உட்காரு "

பிரமி கழுத்திலிருந்த அலுவலக அடையாள அட்டையை கழற்றி தன் கைப்பையினுள் வைத்தாள் .

ஜான் : " பிரமி கேக் சாப்பிடுரியா.. "

பிரமி: " ஜான் விளையாடாத ,  ஈவினிங் ஒரு மீட்டிங் இருக்கு அதை விட்டுட்டு வந்திருக்கேன் ... எதுக்கு அவசரமா வர சொன்ன அதை சொல்லு .. "

ஜான் : " சும்மா உன்ன பாக்கணம்னு தோணிச்சு அதான் வர சொன்னேன் ... ஏன் உன்ன பாக்க கூடாதா ...." ஜான் கண்ணடித்தான் ..


அடுக்களையிலிருந்து கிளம்பிய choco velvet கேக் மணம் மழையினால் கிளம்பிய மண் மணத்தோடு சேர்ந்து இதம் அளித்தது.

பிரமி : " சரியான சாடிஸ்ட் நீ .... " பொய் கோபம் காட்டினாள் .

"வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா .. விளையாட ஜோடி தேவை ....  .."


பிரமி : " ஹலோ .. அ ... அருண் , ஒரு பர்சனல் விஷயமா சீக்கிரம் கிளம்பிட்டேன்  , நீங்க மீட்டிங் அட்டெண்ட் பண்ணிட்டு ஸ்டேட்டஸ் share பண்ணுங்க , ..... தங்க்ஸ் அருண் ... பாய் "
 
ஜான் அந்த white forest கேக்கை பிரமிளவின் அந்த அழகிய பிம்பத்தோடே உள்ளே தள்ளி கொண்டிருந்தான்

பிரமி : " பாரு ..எல்லாம் உன்னால ..  இப்படி ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு permission போட்டுட்டு வந்திருக்கேன் ...  நீ என்னன்னா ஜாலியா கேக் சாப்பிட்டிட்டு இருக்க..."

ஜான் : " இல்ல பிரமி , ஒரு ஷார்ட் டைம் அசைன்மெண்ட் .... நெஸ்ட் வீக் கனடா போக சொல்றாங்க  .. அத சொல்ல தான் கூப்பிட்டேன்  "

வெளியே அடை மழை பெய்ய தொடங்கியது  ....


பிரமி : " என்ன ஜான் விளையாடுரியா ... இன்னும் நம்ம கல்யாணத்துக்கு ஒரு மாசம் தான் டைம் இருக்கு ... நீ முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே ... எங்க வீட்ல தெரிஞ்சா டென்ஷன் ஆகிடுவாங்க " பிரமிளா பொறிந்தாள்

ஜான் : " பிரமி , புரிஞ்சிக்கோ ஒரு முக்கியமான அசைன்மெண்ட் , வேர ஆள் இல்ல .. உங்க வீட்ல நான் பேசிக்கிறேன் ... ஜூஸ்ட் 1 வீக் அசைன்மெண்ட் தான் ..."

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஜானும் white forestum பிரமிளாவை சம்மதிக்கவைத்தனர்....

அடுத்த இரு நாட்களில் ஜான் மட்டும் இரு வீட்டாரையும் சம்மதிக்க வைத்தான்....

"உசுரு தவிச்சிருக்கு எப்போ வருவ நீ ..."

பிரமி : " சொல்லு  கவி .. நான் ஏர்போர்ட்ல இருக்கேன் .. இன்னிக்கு ஜான் கனடா போறாரு அதான் sendoff பண்ண வந்தோம் .... சரிடி நான் அப்பொறம் கால் பன்றேன் ... "



ஜான் : " பிரமி ... பாத்தியா இப்பவும்  climate மேக மூட்டமா தான் இருக்கு .....ஒரு வாரம் உன்ன விட்டு பிரியிறேன் .. ஏதும் இல்லயா .."  ஜான் மெல்லிய குரலில் .. லேசான வெட்கத்துடன் ..


பிரமிளா சுற்றி பார்த்தாள் ... இரு வீட்டாரும்
நாகரிகம் கற்றவர்கள் .. அவர்களை கண்டு கொள்ள வில்லை ...


" எது வரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் என்பதால் விடாமல் கேட்கிறேன்..."

விஜய் : " ஜி ... ஏர்போர்ட் போய்டீங்களா ... வரும் போது மறக்காம ஐபோன் வாஙகிட்டு வாங்க "

ஜான் : " சரி ப்ரோ , நான் அப்புறம் கூப்புடுறேன் "

ஜான் தவிப்பதை பார்க்க பிரமிளாவிற்கு சிரிப்பு வந்தது ...

அந்த விமான சேவையின் இறுதி அழைப்பு ஒலிக்க சற்றே ஏமாற்றத்துடன் .. ஜான் புறப்பட்டான்


" என் சுவாச காற்றே வரும் பாதை பார்த்து உயிர் தாங்கி நான் ..."

ஜான் : " ஹலோ .. எப்படி இருக்க ... "

பிரமி : " ஹ்ம்ம் ... உன் callukku தான்  வெய்ட் பண்ணிட்டி இருந்தேன் "

ஜான் : " இன்விடேஷன் அந்த maroon design நல்லா இருக்கு ... அதையே போட சொல்லு "

பிரமி : " ஹ்ம்ம் .. அங்க climate எப்படி இருக்கு ... "

ஜான் : " இங்க மழை மேகம் மூடிட்டு இருக்கு .. பிரமி ...ஒரு கவிதை எழுதி இருக்கேன் கேக்குரியா ... "

பிரமி : " ஹ்ம்ம்"

ஜான் : "

முகில் கூடும் நேரமெல்லாம் உன்
முகம் பார்க்க தோணுதடி..

மழை விழும் சத்தமெல்லாம் உன்
மன மெட்டு கேட்குதடி...

இரும்புதிரையில் உன் பெயர் பார்த்தால் என்
இதய எடை கூடுதடி


குளிர் காற்றில் என் நடுக்கம்  தணிய உன்
உஷ்ண சுவாசம் கேட்குதடி


நீர் இல்லா மேகம் போல
நீ இல்லா சொர்க்கம் வேண்டாம் ...


இருவரும் ஒரே பொழுதில் இருக்க ..

கைபேசி அற்ற உன் குரல் கேட்க ...

ஊடல் தவிர்த்த காதலாட...

காத்திருக்கிறேன்
..



"


பிரமி அவன் கவிதையில் கரைந்து கொண்டிருந்தாள் ...

கவிதைகளோடும் விசாரிப்புகளோடும் ஐந்து நாட்கள் ஓடின ...


"மாமனே உன்ன காணாம மத்தியில் சோறும் திண்ணாம ..."


ஜான் : " பிரமி ... உன்கிட்ட ஒன்னு சொல்லுவேன் ... நீ என்ன திட்டக் கூடாது .."
ஜான் தயங்கினான்...


பிரமி : "சொல்லு... "

ஜான் : " சொன்னதுக்கு அப்புறம் என்ன திட்டக் கூடாது ... தூரத்துல இருக்கறதால உன் ரியாக்ஷன் என்னவா இருக்கும் தெரியல ... "

பிரமி : "  முடியல , என்ன விஷயம் சொல்லு ...."


ஜான் : "  அசைன்மெண்ட் முடியல ... இன்னும் 2 வாரம் இங்க extend பண்ண சொல்றாங்க ..."

கனடாவிலும் சென்னையிலும் ஒரே சமயத்தில் கருமேகங்கள் கசிய காத்திருந்தன ...


- தொடரும் ...
























Saturday, June 9, 2018

ஆயா

" ஆயா செத்துட்டாங்க , சீக்கிரம் நீயும் தம்பியும் கெளம்புங்க ... "  அப்பா தழுதழுத்த குரலில் பேசி கைபேசியை அமர்த்தினார் ....


என்னிடம் பெரிதாக எந்த சலனமும் இல்லை ... இது நான் ஒரு மாதமாக எதிர்பார்த்தது தான் ... அலுவலகத்திற்கு இரண்டு நாள் விடுப்பு சொல்லி கிளம்பினேன்...

அவர்கள் பற்றி சிறு  சிறு நினைவுகளோடு அந்த டீசல் ஊர்தியில் பயணப்பட்டு கொண்டிருந்தேன் ...

"ணா கார செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்ட் பக்கம் நிறுத்துங்க  .. மாலை வாங்கணும் ..."

நள்ளிரவு மாலை கடைகள் இதற்காகவே அமைக்கப்பட்டிருக்கின்றன ...

"ணா அந்த  மாலை தாங்க " பேரம் எதுவும் பேசவில்லை ...

ஆயாவின் மீது எனக்கு எப்போதும் பெரிதான விருப்பம் இருந்தது கிடையாது .. வீணாக ஊர் சண்டை இழுப்பவர்களாகவும் , பெண் பிள்ளைகள் மீது மட்டும் பாசம் காட்டுபவர்களாகவும் , சீரியல் மாமியார் போல என் அம்மாவுடன் சண்டை போடுபவர்களாக மட்டும் தான் நான் பார்த்திருக்கிறேன் .... இடுப்பு எலும்பு உடைந்த அவர்களுக்கு பணிவிடை செய்ய என் அம்மா சென்றது மேலும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது ...


நான் அங்கு சென்றதும் அப்பா காரின் அருகே வந்தார் ... அழுது துடைத்த கண்கள் , சவரம் செய்யாத முகம் , பார்க்க வித்தியாசமாக இருந்தார்  ...


"மாலை எங்க "

"கார் டிக்கில "

"சரி போய் போடு "

பந்தல் போடப்பட்டு அதனடியில் குளிர் பதன பெட்டியினுள் ஆயா அடைக்கப்பட்டிருந்தாள் ....

பந்தலின் ஒரு முனை தளம் போட்ட வீட்டின் வெளி ஓரத்தில் அடிக்கப்பட்டிருந்தது ..

"சார்லஸு இந்த கூரை ஒழுகுது .... ஓடு மாத்தனும்ப்பா ... " ஆயா  8 வருடங்கள் முன்னர் கூறியது நினைவுக்கு வந்தது ...

சிவப்பு முந்தானை மஞ்சள் நிற புடவையால் சுற்றப்பட்டிருந்தாள் ...

நான் பந்தல் அருகே சென்றவுடன் அம்மா
" சார்லஸு , ஆயா நம்மள விட்டு போயிடிச்சுடா  ... அம்மா உன் பேரனுங்க வந்திருக்கானுங்க பாரு " ஒப்பாரி வைத்தாள் ...

அழ முயற்சித்து கொண்டிருந்தேன் ... 5 நிமிடங்கள் பின்னர் அங்கிருந்த பெண்கள் தாங்கள் அழுவதை  சிறிதே ஒத்தி வைத்தனர் ...


விடியற்காலை மூன்று மணி தூங்க முயற்சித்தும் தூக்கம் வரவில்லை ...

" மா ஆயா தூங்காம ஏதோ பெணத்திக்கிட்டு இருக்கு "

" பாவம் அது வலில ஏதாச்சும் சொல்லும் , நீ தூங்கு ... ஆப்ரேஷன் பண்ணவும் அந்த டாக்டர் பயப்படுறான் ..." அம்மா படுத்து கொண்டாள் ...


தண்ணீர் குடிக்க மீண்டும் எழுந்தால் , ஆயா  பேனாத்திக்கிட்டே இருந்தார்கள் .... கையை அவர்கள் பக்கம் கொண்டு போனேன் ... இறுக பற்றி எழ முயற்சித்தார்கள் ...

"ஆயா படுத்து தூங்கு .... "

ஏதோ சொல்லி கொண்டே இருந்தார்கள் .. ஒன்றும் புரியவில்லை ... சிறிது நேரம் கழித்து படுக்க சென்று விட்டேன் ....

இது நடந்து சரியாக ஒரு மாதம் இருக்கும் ... ஆயாவின் சத்தமற்ற அழுகை என்னை அசௌகரியப்படுத்தியது....

உறவினர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர தொடங்கினார்கள் ....


" அப்போல்லாம் ரொம்ப கஷ்டம்...  ஒரு மாட்டோட தொடய தலையில சுமந்திக்கிட்டு உங்க ஆயா செங்கல்பட்டு வரைக்கும் நடந்தே போயி அதை வித்து தங்கச்சி தம்பிகள காப்பாத்திச்சி  ... ரொம்ப கஷ்ட்டப்பட்டுச்சு......  இன்னொருத்தர் பத்தி எப்போவுமே புறம் பேசாது ... உங்கப்பா என்னை  திட்டுனாலும் , ஏன்டா அவல திட்டுற னு கேக்கும் .... எப்போ வந்தாலும் சோறு பொங்கி வைக்கும்  "  அம்மா கண் கலங்கினாள் ..

"எப்பா இந்த box தூக்கு , அக்கா மூஞ்சில மஞ்சள் தடவுறேன் ... " ஆயாவின் தங்கை ..

மேல் இருந்த மாலைகளை அகற்றி விட்டு அந்த பெட்டியின் மேல் பக்கத்தை திறந்தேன் ..


அத்தை பிள்ளைகள் வந்தவர்களை மோர் , டீ கொடுத்து கவனித்து வந்தனர் ... பெண் பிள்ளைகள் முகம் வாட்டமாய் இருந்தன...

சவ பெட்டி கொண்டுவரப்பட்டது ... அம்மா வீட்டு முறைகள் முடிந்ததும் , சரீரத்தை அந்த சவ பெட்டியினுள் வைத்தார்கள் ...

"சார்லஸு , நான் செத்தா அழுவுயாப்பா ..." எப்போதோ ஆயா கேட்டது நினைவுக்கு வந்தது ....


என்னையும் அறியாமல் 5 நிமிடம் தலையை குனிந்து அழுது கொண்டிருந்தேன் ....

அப்பா வேகமாக உள்ளே சென்று ஐநூறுக்கும் குறையாத சில்லறை காசுகளை கொண்டு வந்து பெட்டியினுள் இறைத்தார் ...


பெட்டி தூக்கும் சமயம் , அத்தைகள் ஓவென்று கதறி அழுதனர் ... தாத்தாவுக்கு கடைசியாக பாட்டியின் முகம் காண்பிக்க பட்டது ...


அத்தை மகன்கள் தெருவின் இருபுறமும் மாலைகளை உதிர்த்து கொண்டே வந்தனர்...

பெட்டி குழிக்குள் இறக்கி வைக்க பட்டது ... எப்பொதும் கடினமாக இருக்கும் அப்பா  அன்று இளகி இருந்தார் .... தூரத்து சொந்தம் ஒருவர் வீட்டை கழுவி சுத்தப்படுத்தி வைத்திருந்தார் ...


அன்று மாலை ஆயாவின் புகைப்படம் வைக்கப்பட்டு அதன் முன்னர் அவர் துணிகள் , அவர் நகைகள் மற்றும் பூ வைக்கப்பட்டிருந்தன ...

அப்பா அந்த புது பூஸ்ட் பாட்டிலை " எங்கம்மாவுக்கு பூஸ்டு னா ரொம்ப பிடிக்கும்" சொல்லி அதை புகைப்படத்தின் முன்பு வைத்து விட்டு சென்று விட்டார் ...

"என்னை புள்ள மாதிரி ஆயா பாத்துகிச்சி " மாமா பம்பு செட் அருகினில் கலங்கினார் ...


அடுத்த நாள் கல்லறையை மொழிகி ஊருக்கு கிளம்பினோம் ...

வாசலருகே நின்று ஆயா வழி அனுப்புவது ஞாபகம் வந்தது ...

 " அடிக்கடி வந்து போங்கப்பா, இங்க நானும் இந்த கிழவனும் தான் இருக்கோம் , மலாட்ட பயிறு இன்னும் கொஞ்சம் கொண்டு போறியா.... "


கூன் விழுந்த முதிர்ந்த உயிர்கள் சுயநலமற்றவை ...

அன்பிற்கு மட்டும் ஏங்கி திரியும் அவர்களை உங்கள் சந்திப்பினால் சிறிது காலம் வாழ வையுங்கள் ...














































Saturday, May 12, 2018

அறல்

கீழ் வானம் கதிரவனை வழி அனுப்பி விட்டு சந்திரனை வரவேற்க ஆயத்தமாய் தன் நிறத்தை மாற்றி கொண்டிருந்தது . சிவப்பு , நீலம் , வெள்ளை , மஞ்சள், பழுப்பு , கருப்பு ... வானத்திற்கு தான் எத்தனை நிறங்கள்....


 மனிதர்களை போல வானம்  அதன் நிறம் மாறும் தன்மையால் வசை வாங்குவதில்லை .....




 அந்த பழுப்பு நிற சாரை  பாம்பு வெளியே வர எத்தனிக்க , தவிட்டு குருவிகள் அதன் பொந்தை சுற்றி வலம் வந்துக்கொண்டிருந்தன .


பால் மடி சற்றே வற்றிய மாடுகள் வைக்கோல் கிழிசலை அசைப்போட்டுக்கொண்டிருந்தன.

பாக்கியா கழத்துமேட்ட வெறித்தப்படியே முதுமை பறித்தது போக மிச்சமிருந்த முடியை தடவிய வாறே வீட்டை நோக்கி நடந்துக்கொண்டிருந்தார்.




" என்ன மாமாச்சி ரெட்டியார் என்ன சொல்றான் , தண்ணி கேட்டியா "  எதிரில் வந்த செல்வராஜ் பாக்கியாவிடம் .


" கேட்டேன் ஏற்கனவே பெருமாள் கேட்டிருக்கானாம் , அடுத்த வருஷம் பாக்கலாம்னு சொல்லிட்டான் ... போன வாரம் ஆறுமுகம் தண்ணி விடுறான் சொன்னான் அதை நம்பி வாய்க்கால் வெட்டிட்டேன் .... கடைசில   அவன் தம்பி மலாட்ட போடுறான் அதுக்கு தண்ணி வேணும் முடியாதுன்னு சொல்லிட்டான் "


தூரத்தில் மாரியம்மன் அம்மன் கோவில் மைக் செட் ஒலி எழுப்ப தொடங்கியது ...


" என்னமோ போ மாமாச்சி , இப்படியே நீயும் 5 வருஷமா ஏமாந்துட்டு தான் இருக்க , கழனி என்னன்னா அங்க கரம்பா இருக்கு , சேகரு உன் கழனி வழியா தான் அவன் லாரிய ஒட்டிக்கினு போறான் "

"ப்ச்" பாக்கியா உதட்டை பிதுக்கினார்.

" சரி அத்தையை கேட்டதா சொல்லு , நான் இந்த பானையை கட்டிட்டு வரேன் , நம்ம பாய்  வீட்டுக்கு ஆள் வரங்களாம் நாளானைக்கு கல்லு கேட்டாரு "  செல்வராஜ் வாயில் குதுப்பிய பாக்கின் சாறை சிறிது முழிந்து கிளம்பினான் ...


மணியம்மை காய்ந்த புங்கை மர சருகுகள் சேர்த்து அவற்றை உறையாக்கி சாணி அள்ளி கொண்டிருந்தாள்.

மதியம் மணியம்மையிடம் கல்லடி வாங்கிய  ஜாக்கி மெல்ல ஓடி சென்று புளிய மரத்தடியில் அமர்ந்தது .

' ஜாக்கி ' பாக்கியாவின் பேத்தி அதற்கு வைத்த பெயர்.

பாக்கியா புளியமரத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த பானையில் தண்ணீர் மோந்து காலின் மீது ஊற்றினார் .


"ஏம்மா அந்த மம்மூட்டி கடப்பாரை கொண்டு வா .." சொல்லிவிட்டு வீட்டின் பின்புறம் சென்றார் ..

 நெல்லை கொறித்த கோழிகள் தங்கள் கூண்டை அடைந்தன.

மணியம்மை சாணியை கூடையில் அள்ளி கொட்டிவிட்டு , கைகளை அலம்பி மண் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பாரை மம்மூட்டி எடுத்துக்கொண்டு பின் புறம் சென்றாள்.

" ரெட்டியார் என்ன சொல்றாப்ல"

" அந்த கடப்பாரையை குடு ..." 

மணியம்மை புரிந்து கொண்டாள்....


 வேலிக்கத்தான் செடியிடம் தன் ஈரப்பதத்தினை பறிக்கொடுத்த காற்று வேப்ப மரத்தினை மோதி தன் சக்தியை சோதித்து கொண்டிருந்தது .

" எவ்ளோ நாள் தான் ஊருக்கு தெரியாம இதை பண்ண போற , ஒரு வார்த்த புள்ள கிட்ட சொல்லிடுவோமா "

பாக்கியா எதுவும் பேசவில்லை , தென்னை மர ஓலைகளை அகற்றுவதில் மும்மூரமாயிருந்தார்.

தென்னை ஓலையில் ஒட்டியிருந்த மரவட்டை ஓலையின்  அசைவினால் தன் உடலை சுருட்டி கொண்டது .

தென்ன ஓலைகளை அகற்றி அதன் அடியில் இருந்த குழியில் கடப்பாரையை போட்டார்.

அந்த குழியில் அமைந்திருந்த மண் படிக்கட்டினை லேசாக மிதித்து கீழே இறங்கினார் .

மணியம்மை பாத்திரங்களை அடுப்பு கரியினை தொட்டு தேங்காய் நாறினால் தேய்க்க தொடங்கினாள்.


வானம் கரிய நிறம் அடைய தொடங்கியது.


மணியம்மை வைத்த வாளை கருவாட்டு குழம்பின் மனம் ஜாக்கியின் வாயில் நீர் சுரக்க வைத்தது.

பாக்கியா கடப்பாரையை கழுவி வைத்து விட்டு வீட்டினுள் நுழைந்தார்.


" உட்காரு ஒரு நிமிஷம் முட்ட பொறிச்சி எடுத்துட்டு வரேன் "


பாக்கியா சாணி மொழுகிய மண் தரையில் துண்டை விரித்து அமர்ந்தார் .

கொழுத்த வெள்ளை பூனை கருவாட்டு குழம்பின் மணத்தின் தூண்டலில் செம்பருத்தி செடியின் அடியில் பதுங்கியிருந்தது ...


மணியம்மை சோற்றை பரிமாறினாள்...

" இன்னும் எவ்ளோ நாள் தான் தோண்ட போற ... இப்போவே பார தட்ட அரம்பிச்சிடிச்சு ... பேசாம புள்ள கிட்ட சொல்லிடிவோம் ...." மணியம்மை ஆரம்பித்தாள்...

" எங்கப்பா நீரோட்டம் பாத்த இடம் அது .. கண்டிப்பா தண்ணி வரும் ... ஓரு மாசம் பொறுத்துக்கோ ... பாறை மேலோட்டமா தான் இருக்கு நாளைக்கு கோனார் கிட்ட சுத்தி வாங்கி உடைக்க போறேன்..."

மணியம்மை தயிரை ஊற்றினாள்...


பாக்கியா சாப்பிட்டுவிட்டு மீதி சோற்றினை ஜாக்கிக்கி வைத்தார் ..

அவர்கள் ஒரே தட்டு சோற்றினை சாப்பிடும் பங்காளிகள் ..

ஏழு  மாதங்கள் உருண்டோடின ..


அன்று  மாலை பாக்கியா கழனியில் இருந்து வீடு திரும்பி இருந்தார் ... வானம் செந்நிறம் ஆகி இருந்தது.


வீட்டு வாசலில் கோபியின் செருப்பு , வெளியே திவ்யா பணங்காய் சக்கர வண்டியை உருட்டி விளையாடி கொண்டிருந்தாள்....


"திவ்யா குட்டி எப்போ வந்த ?"


"இப்போ தான்  , புளிய மரத்தில ஊஞ்சல் கட்டுரியா தாத்தா "

"இரு வரேன் "



ஜாக்கி திவ்யாவின் அருகே அந்த பணங்காய் வண்டியை வெறித்த படியே அமர்ந்திருந்தது.


"என்னப்பா எப்படி இருக்க , கமலா வரலையா "

"ஹ்ம்ம் இருக்கேன் , அவ்ளோ பெரிய குழி எதுக்கு பா வீட்டுக்கு பின்னாடி வெட்டி இருக்க , அம்மாட்ட கேட்டாலும் ஏதும் சொல்லமாட்டேன்கிது "


பாக்கியா மண் திண்ணையில் அமர்ந்து அந்த கிணற்று குழியை வெறித்தபடியே இருந்தார் ...


" சொல்லுப்பா , வீட்டை சுத்திரி மண்ணு கொட்டி மேடாக்கி இருக்க ... ஏதாவது புதையல் கிதயல் தேடுரியா " கோபி பொரிந்தான்..


"கிணறு வெட்டுறேன்பா , ஊரே தண்ணி இல்லாம 5 வருஷமா காஞ்சி கிடக்குது ... ரெட்டியாரும் கைய விரிச்சிட்டான்...  நம்ம கழனி கரம்பா இருக்குப்பா "

"பா என்ன விளையாடுரியா , அவன் அவன் 400 அடி 500 அடி தோண்டியே தண்ணி வரல நீ அம்பது அடி கூட தோண்டி இருக்க மாட்ட இதுல எப்படி தண்ணி வரும் .. "

முருங்கை மரத்தில் இருந்த கம்பளிப்பூச்சி மெல்ல மேலே ப்ரயானப்பட்டது.

சிறிது நேரம் மணியம்மை கோபி பாக்கியா வாதங்கள் தொடர்ந்தன .


"பா எப்படியோ பண்ணிட்டு போங்க , நல்ல வேல என் பொண்டாட்டி வரல ... இல்லனா இந்த கூத்த அவங்க அம்மா வூடு பூரா பரப்பி இருப்பா "


"மா நா காலம்பர களம்புறேன் .."

பாக்கியா எதுவும் பேசி கொள்ள வில்லை , அவர் கவலை  இன்றைக்கு குழியை தோண்ட முடியாதது தான் .


"என்ன எதுவும் பேசாம வந்துட்ட , அவன் மூஞ்சி கழுவ பின்னாடி போனான் , அப்போ குழிய பாத்துட்டான் " மணியம்மை ஆரம்பித்தாள் .


"விடு , என்னைக்கு இருந்தாலும் தெரியதானே போகுது , ஊருக்காரணுகளுக்கு தெரிஞ்சா கேலி பண்ணுவானுங்க புள்ள தானே அதான் கோவப்படுறான் .... நீ திவ்யாவுக்கு சோறு ஊட்டி விடு.."

அன்றிரவு பாக்கியா சரியாக சாப்பிடவில்லை , பங்காளி ஜாக்கி மட்டும் நிரம்பிய வயிருடன் உருண்டது...


அதிகாலை பனி வயல் வெளிகளில் மீது போர்வை போல படர்ந்து இருந்தது...


கோபி மாடத்தில் இருந்த கரி துண்டை நுணுக்கி பல் தேய்த்து கொண்டிருந்தான்...

மாடுகளை பெருமாள் சொசைட்டிக்கு ஓட்டி சென்றார்..

"மா அப்பா எங்க ஆள காணோம் ... "

கோழி கூண்டின் முன் இருந்த பலகையை திறந்த மணியம்மை " தெரியலையே எங்காவது வெளிக்கு போய்  இருக்கும் .. நீ திவ்யாவை எழுப்பி கிளப்பு"


முகத்தை கழுவ பின் பக்கம் சென்ற கோபி "மா" என்று கத்தினான் ..

மணியம்மை ஓடி சென்று பார்க்கும் போது கோபி அந்த குழியின் அருகே முழங்காலிட்டு தலையை குழிக்குள் விட்டிருந்தான் ..

மணியம்மைக்கு நெஞ்சு படபடத்தது...

"என்ன ஆச்சுடா "

"மா,இங்க வந்து அப்பாவ பாரேன் "


திவ்யா அதற்குள் எழும்பி விட்டாள்... ஜாக்கி   மணியம்மையை பின் தொடர்ந்தது ..

பாக்கியா கிணற்றின் கடைசி படி அருகில் இருந்தார் ... அவர் முட்டி வரை சேறு கலந்த நீர் இருந்தது ..

மணியம்மை கண்ணில் நீர் கசிந்தது ..

" ஏண்டி  பாத்தியா ... 10 மாச  உழைப்பு ... இது தண்ணி இல்ல இந்த பூமி தாயின் சதைக்கு அடியில இருக்க ரத்தம் ...
அந்த ரெட்டி என்ன எனக்கு தண்ணி தர்றது ... நாம அடுத்த மாச நடவு நடறோம் " பாக்கியா சந்தோஷத்தில் வாய் குழற வார்த்தைகளை அடக்கினார்...

" டேய் கோபி இதான் நான் தேடுன புதையல் ..." சொல்லும் போதே பாக்கியாவின் முகத்தில் பெருமை தெரிந்தது...


பாக்கியா மேலே ஏறி வந்தார் .. அவர் காலில் சேருடன் கொய்யா மர செருகளும் ஒட்டி இருந்தன ...

" திவ்யா குட்டி நீ அடுத்த தடவை வரும் தாத்தா வீட்டுல நீ விளையாடுறதுக்கு தண்ணி தொட்டி இருக்கும்.... ..." பாக்கியா சந்தோஷத்தில் பெருமூச்சு வாங்க பேத்தியிடம் 

கோபியும் மணியம்மையும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர் ...


சூரியன் அந்த நீரில் விழுந்து அதையும் நிறமாற்றி ஆக்கியிருந்தது...


இன்று பாக்கியநாதன் கிணறு என்று சொன்னால் அந்த ஊரில் தெரியாத ஆளே கிடையாது ...





























Sunday, March 4, 2018

காதலாட ..... காதலாட ....



" தேடி கட்டிக்க போறேன் .... தாவி ஒட்டிக்க போறேன் ... தாலி கட்டிக்க போறேன் ..... நான் தான் ... ஏய் சண்டை .... "  பிரமிளா செல்போனின் மேற்பரப்பை மெல்ல தடவி  காதில் வைத்தாள் .


பிரமிளா : " ஹ்ம்ம் சொல்லுப்பா எங்க இருக்க "

ஜான் : " ஆபீஸ்ல , நீ போய் சேர்ந்துட்டியா ? "

பிரமி : "  சேர்ந்துட்டேன் ,  ஏய் எங்க அண்ணன் கால் பண்ண சொல்லிருந்தான் , அவனக்கு போன் பண்ணிடு  "

ஜான் : " சரி ! நான் பண்ணிக்கிறேன் , வெளிய பாத்தியா "

பிரமி : " ஒரு நிமிஷம்ப்பா .... ஆமா  நீங்க  பண்ண changes மட்டும் கமிட் பண்ணிடுங்க , நான் review பண்ணிட்டு merge பண்ணிடுறேன் ... oh ஓகே    அது problem இல்ல ... ஹ்ம்ம் my pleasure   ..... ஹே  ஜான் சாரி  இங்க teammate .. "

ஜான் : " ஹ்ம்ம் , நோ problem , வெளிய பாத்தியா "

பிரமி : "  வெளிய என்ன , மேகமூட்டமா இருக்கு "

ஜான் : " ஹே , ஒரு விஷயம் கவனிச்சியா , நாம எப்ப போன் பண்ணாலும்   climate மேகமூட்டமா மாறிடுது , actually இது தான் ரொமான்டிக் climate "

பிரமி : " ஹா ஹா  ஜான் , கம் ஆன் , இது கோ-இன்சிடென்ட் , வேணும்னா நான் லஞ்ச் முடிச்சிட்டு பண்றேன் , கிளைமேட் மாறுதானு பார்ப்போம் "

ஜான் : " சரி பிரமி , எனக்கு மீட்டிங் time ஆயிடிச்சு , லஞ்ச் முடிச்சிட்டு பேசுவோம் ".

மூன்று மாத்திற்கு முன் :

ரேச்சல் : " ஹே ஜான் சொல்லுடா "

ஜான் : "  நேத்து  பொண்ணு பாத்துட்டு வந்தோம்ல , அவங்க  அண்ணன்  நம்பர் இருக்கா , சும்மா பேச  "

ரேச்சல் : " அவங்க அண்ணன் கிட்ட என்ன சும்மா பேச போற , அந்த பொண்ணு நம்பர் இருக்கு தரவா ?"

ஜான் : " சரி தா , அந்த பொண்ணு கிட்ட நான் என்ன பேச போறேன் , அவகிட்ட அவங்க அண்ணன் நம்பர் வாங்கிக்குறேன் "

ரேச்சல் : " ஹே நடிக்காத , நான் உன் அக்கா , என்கிட்டயேவா , சரி ஏதோ பண்ணு , நம்பர whatsapp  பண்ணி விடறேன் "


"என் சுவாச காற்றே வரும் பார்த்து உயிர் தாங்கி நான் இருப் .."


பிரமிளா : " ஹலோ "

ஜான் : " ஹலோ நான் ஜான் பேசுறேன் "

பிரமி : " எந்த ஜான் ?"  , சிரித்தாள் மெல்ல ..

ஜான் : " நேத்து பார்த்தோம்ல , ஜான் , எப்படி இருக்கீங்க "

பிரமி : " ஓ ஜான் சொல்லுங்க , சாரி  நான் நல்ல இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க "

ஜான் : " நான் சூப்பரா இருக்கேன் , ஒன்னும்  இல்லங்க  சும்மா தான் போன் பண்ணேன் , உங்க அண்ணன் நம்பர் வேணும்  "

பிரமி : " ஓ ... நான் கூட என்கிட்ட பேச தான் கூப்பிட்டீங்களோனு நினச்சேன் " சிரித்தாள்

ஜான் : " ஹா ஹா ஹா ... "

பிரமி : " நீங்க ஓகே சொன்னதா கேள்விப்பட்டேன் , உங்க family க்கு என்னை பிடிச்சிருக்கா "

ஜான் : " எல்லாருக்கும் , உங்கள பிடிச்சிருக்கு , உங்க பேமிலி க்கு என்ன பிடிச்சிருக்கா "

பிரமி : " பாத்தீங்களா எங்க பேமிலி க்கு பிடிச்சிருக்கானு கேக்குறீங்களே எனக்கு பிடிச்சிருக்கானு கேக்க மாட்டீங்களா "

ஜான் : " ஹா ஹா ஹா சாரி ங்க , உங்களுக்கு பிடிச்சிருக்கா " , வெட்கப்பட்டான்

பிரமி : " ஹ்ம்ம் "

ஜான் : " ............"

பிரமி : " என்ன ஜான் எதும் பேச மாட்டேங்கிறீங்க "

ஜான் : "  ஒன்னும் இல்லங்க  ஏதோ புதுசா  feel பண்றேன்  " .. நெஞ்சின் அடியில் இருந்து ஒரு இரசாயனம் அதிகமான மூச்சுக்காற்றை மூக்கின் வெளிய தள்ளி மூளைக்கு கொண்டு செல்வதை  உணர்ந்தான் .

பிரமி : " ஹா ஹா ஹா "

ஜான் : " ஹா ஹா .. அப்புறம் சாப்பிடீங்களா "

உரையாடல் தொடர்ந்தது ... பன்மைகள் ஒருமை ஆகியிருந்தன , புதிதாக அறிமுகப்படுத்திய கைபேசி சேவையின் தயவால் அழைப்புகள் பன்மடங்காகி இருந்தன .... ஜானின் பள்ளி பருவ நண்பன் முதல் அவனுக்கு பிடித்த இசையமைப்பாளர் , பிடித்த வெளிநாடு வரை பிரமி அறிந்திருந்தாள் , அவனின் குடும்ப உறுப்பினர்கள் அவளுக்கு அத்துப்படி .... பிரமிளாவின் லக்கி நம்பர் இல் இருந்து அவள் அண்ணன் பிறந்தநாள் அவளின் கிட்டார் திறமை வரை ஜான் அறிந்திருந்தான் ... யாருமே படிக்காத அவள் எழுதும் வலைப்பக்கத்தில் இவன் ஒருவன் தான் வாசகன் ... பாராட்டாக மின் கைகுலுக்கல்கள் பரிமாறப்பட்டன .

Amazon ம் E - Bay ம் பரிசுகளை பரிமாற்றும் சேவையை செய்திருந்தன .


" எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் என்பதால் தொடாமல் போகிறன்  , தேன் .."



பிரமி : " ஹே ஜான் , சொன்ன மாதிரியே வெளிய மேகமூட்டமா இருக்குப்பா "

ஜான் : " பிரமி , நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் , OMR கேக் கோர்னெர் வரியா "

பிரமி : " ஏய் எதுவா இருந்தாலும் போன்லயே சொல்லு , அவ்ளோ தூரம் நீ எப்படி வருவா "

ஜான் : " வேணா , நான் போன்ல சொன்னா நீ என்ன express பண்றனு என்னால பாக்க முடியாது .. நேர்ல வாயேன் "

பிரமி : " அப்படி என்ன சொல்ல போற , பரவா இல்ல போன்லயே சொல்லு "

ஜான் : " பிரமி , ப்ளீஸ் நேர்ல வாயேன் "

பிரமி : " சரி நான் கிளம்பிட்டேன் , நீ கிளம்பு உனக்கு தான் லேட்டாகும் "

ஜான் : " நான் already கிளம்பிட்டேன் , சீக்கிரம் வா"


OMR கேக் கோர்னெர் 


பிரமி :  " ஏய் ஏதோ  முக்கியமான விஷயம்னு சொல்லிட்டு , ஹையா whiteforest சாப்பிட்டிட்டு இருக்க "

ஜான் : " ஹே பிரமி உட்காரு சொல்றேன் "

பிரமி : " நீ first  சொல்லு "

ஜான் பிராமியின் கண்களை உற்று நோக்கி இருந்தான் , வெளியே மழை மேகங்கள் தூரலிட ஆரம்பித்தன ...


- தொடரும் 











 








Tuesday, June 20, 2017

அந்த 'ஒரு ' எழுத்து



Image result for tamil letters images download

16  வருடங்கள் உருண்டோடிவிட்டன !!

இன்று காலை எனது கல்லூரியில் இருந்து வந்த அந்த 'முன்னாள் மாணவர் கூடுகை ' மின்னஞ்சல் மீண்டும் அந்த நாளை நினைவூட்டியது .

விஸ்வரூபம் பட இன்டெர்வல் பிளாக் போல , நான் கல்லூரிக்கு சென்ற 480 நாட்களில் அந்த ஒரு நாள் மட்டும் ஸ்லொவ் மோஷனில் நிழலாடியது

அன்று தமிழ் துறை ஆண்டு விழா !!!

' நெஸ்ட் ப்ரோக்ராம் பெய் bsc ஸ்டுடென்ட்ஸ்" அறிவிப்பு ஒலிக்கும் முன்னரே மேடையில் ஆஜர் ஆகி இருந்தோம் . முக்கிய கதாப்பாத்திரங்களை நண்பர்களுக்கு அளித்து விட்டு முடிவுரையை மட்டும் நான் பேசுவதாக இருந்தது .

ஆரிய திராவிடம்  அடக்குமுறை என்று என் வயதுக்கு மீறிய உதாரணத்தோடு முடிவுரை தயார் செய்து வைத்திருந்தேன் .

முதல் நான்கு வரிகள் எந்த பிரச்சனையும் இல்ல , நான் பயந்த அந்த எழுத்து வந்து விட்டது , நான் உச்சரித்து முடிக்கும் முன்னரே மாணவர்கள் மத்தியில் 'கொல்' என சிரிப்பு சத்தம் !!

மீண்டும் அதை தவறாக உச்சரித்து விட்டேன் !!! எனக்குள் கட்டி வைத்திருந்த தன்னம்பிக்கை சுவற்றினை அங்கு குழுமியிருந்த 750 மாணவர்களும் ஒரு சேர இடிப்பதை போல் ஒரு உணர்வு  .

முகத்தில் அசௌகரிய பாவம் ; நன்றி என கூறிவிட்டு விரைந்து உள்ளே ஓடினேன் .

என் பள்ளி பருவத்தில் இருந்து அந்த 'ஒரு ' எழுத்து எனக்கு பிடிகொடுக்க மாட்டேங்கிறது .

'மித்த் மித்த் ' என கூப்பிடும் வட நாட்டு நண்பனை ' அது மித்த் இல்ல மிஸ் , எங்க சொல்லு இஸ் , இப்போ சொல்லு மிஸ் , ஆஹ்ன் அதான் ' என திருத்தி இருக்கிறேன் .

"அது கனிமொசி இல்ல கனிமொழி , சொல்லு கனி.., மொ.., ழி.. " இன்னொரு தெலுங்கு நண்பனிடம் .

 'ழ ' போன்று தமிழ் மொழிக்கு மட்டும் சொந்தமான எழுத்தாக இருந்திருந்தால் , தேவைப்படும் இடங்களில் ஆங்கிலத்தில் உரையாடி அந்த எழுத்தை தவிர்த்திருப்பேன் .

' மச்சி வாயில  கூழாங்கல்லை போட்டு ப்ராக்டிஸ் பண்ணு , என் தம்பிக்கு தி** வாய் இருந்திச்சு , இப்போ பரவ இல்ல ' நண்பனின் அறிவுரை . ஆனா நான் எந்த தடையும் இல்லாம பேசுவேன் .

' இவன் ரொம்ப அமைதியான பையன் , அவ்வளவா யாருகிட்டயும் பேச மாட்டான் " , பள்ளி ஆசிரியர்களிடையே அந்த  எழுத்தின் மீதான என்  பயம் நன்மதிப்பை கூட்டியது .

என்னை போலவே அந்த எழுத்தை நீங்கள் உச்சரித்து கிண்டல் செய்தால் போதும் , இரண்டு நொடிகளில் தொண்டை கம்மி , கண்களை நீர் துளிகளை சேர்த்து நிற்பேன் .  வாக்குவாதத்தில் என்னை தோற்கடிக்க , இந்த ஒற்றை ஆயுதம் போதும் .

பல முறை ஒளி உச்சரிப்பு காணொளிகளை பார்த்து திருத்தி கொள்ள முயற்சித்திருக்கிறேன் ... மேடை பேச்சாளராகும் என் கனவு தான் இத்தனை முயற்சிகளை நோக்கி நகர்த்தியிருந்தன.

அந்த சம்பவத்திற்கு பின்பு , நிறைய மேடைகளில் பேசி இருந்தாலும் அந்த  ஒரு எழுத்தை ஜாக்கிரதையாக தவிர்த்து என் உரையை  தயார் செய்திருந்தேன் .

இன்று மாலை ,

' இப்பொழுது 2001  ஆம் ஆண்டு  மாணவர் அணி தலைவர் உங்கள் மத்தியில் உரையாற்றுவார் ' , மைக் என்னிடம் வந்தது .

அந்த நாளில் என் பேச்சை கேட்ட பலர் , இங்கும் இருந்தனர் . நாக்கை மெல்ல மேல மடித்து ஆரம்பித்தேன் அந்த ஒரு எழுத்துடன்  என் உரையை !!!!!