சென்னை தன் நவீன குழந்தையை பிரசவித்திருந்தது .
இந்த யுகத்தின் தொட்டியில் அந்த பிள்ளை தவழ தொடங்கியிருந்தது .. அதன் கரு பல மனித விந்துகளின் உழைப்பை உறிஞ்சி ஊட்டம் பெற்றது.
நவீன சென்னை குப்பங்களை புடமிட்டு அதின் நிலங்களை மட்டும் தன் அகத்தே கொண்டது.
குப்பங்கள் தென் சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளாய் உருவெடுத்திருந்தன ...
சென்னை தன் இந்த பிள்ளையை வளர்த்தெடுக்கவும் பூர்விகவாசிகளை அங்கு அமர்த்தியது .
ஆக்கிரமிப்பு என்ற ஒற்றை சொல்லில் அவர்களின் 500 ஆண்டு அடையாளத்தை அவமானப்படுத்தி , சுதந்திர அகதியின் மனநிலையோடு அவர்களை உலாவ விட்டது .
" டேய் பாலா நாளைக்கு நாங்க எங்க அம்மா வேல செய்யுற கம்பெனிக்கு போறோமே ..."
அன்பு கல்லோடு இணைக்கப்பட்ட அந்த மாஞ்சா பூசப்பட்ட நூலை சுற்றியவாறு தன் நண்பனிடம் பேசி கொண்டிருந்தான் .
" அங்க பெரிய ஆஃபீஸ் இருக்கும் , அப்புறம் ..அப்புறம் அங்க நெறய மரம் இருக்கும் , நெறய சாப்பிட கிடைக்கும் ... " அன்பு பெருமிதத்துடன் தன் நண்பனிடம் .
" டேய் அங்க 10 மாடி இருக்குமா ... "
"இல்ல எங்க அம்மா சொன்னாங்க அங்க 20 மாடி இருக்குமா , அங்க இருந்து பாத்தா நம்ப வீடுலாம் தெரியும் , நான் அங்கிருந்து உன்னை பாப்பேனே .." அன்புவின் நாக்கோடு உதடு தாளம் போட்டது.
"டேய் உங்க அப்பா வறார் டா" பாலா உஷார்படுத்தினான் .
" அப்பா .." என்று கத்திக்கொண்டே அன்பு குணாவை பின் தொடர்ந்து ஓடினான்.
குணா ...நீங்கள் முப்பது வயதுடைய , ஒல்லியான ஒரு கட்டிட வேலை செய்பவனை கற்பனை செய்தால் அதற்கு சற்றும் மாறாமல் தோற்ற அமைப்பை உடையவன் .
விற்பனை நிறுத்தப்பட்ட அந்த டி வி எஸ் சாம்ப் , இவன் வரவை அந்த குடியிருப்பு முழுவதும் தண்டோரா அடித்தது. இவனை காட்டிலும் அதிகமாய் அது சுரண்டப்பட்டிருந்தது ....
குணா தன் சட்டையை அவிழ்த்து கொடியில் போட்டான் ..அதன் பை இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒருசேர பார்த்ததில்லை ...
லுங்கிக்கு அடியில் கையை விட்டு தன் அரைக்கால் சராயை உருவி கொடியில் போட்டான் .
" ஏய் அன்பு... வூட்ல இல்லாம எங்க போயி சுத்திட்டு வர "
கதவோரம் அன்பு சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.
" வெளிய பாலா கிட்ட பேசிக்கினிருந்தேன் பா .."
" சாப்பிட்டியா"
"ம்ம்"
" அம்மு எங்க ... "
"அது மேல் வீட்டு அக்கா கூட கடைக்கு போயிருக்கு "
குணா பாய் விரித்து ஒரு துண்டை தலைக்கு வைத்து படுத்தான் ..
" அவளை வெளிய போவ கூடாதுனு சொல்லி இருக்கேன்ல ... வரட்டும் இன்னிக்கு பேசிக்கிறேன் ... "
குணா குப்புற படுத்தான் .. மணி ஆறு தாண்டி இருக்கும் ...
"நைனா.. வந்து அப்பா முதுகை மிதி டா"
அன்பு அந்த நூல் பத்தையை ஓரம் வைத்து விட்டு குணா முதுகில் ஏறினான்... குணாவின் முதுகு சுமைகளின் பிடிப்பை சற்றே தளர்த்திக்கொள்ள காத்திருந்தது.
" அன்ப ... நாளைக்கு நீயுமா உங்கம்மா கூட போற .."
அன்பு சற்றே அதிர்ச்சியுடன் ..
" ஆமப்பா ... அம்மு இங்கேயே இருக்கட்டும் .. நான் போறேன்"
அம்மு கையில் கொஞ்சம் மல்லி மொட்டுகளை ஏந்தியவாறு உள்ளே நுழைந்தாள் ..
"ஏய் எங்க வூடுன்னு தங்காம வூர் சுத்திட்டு வர "
" நம்ம கவிதா அக்கா தான் கடைக்கு கூப்பிட்டிச்சு ... அதான்கூட போயிட்டு வரேன் "
"என்னது கையில"
"அக்கா பூ வாங்குச்சா , அதுல கொஞ்சம் அம்மா கிட்ட தர சொல்லிச்சு "
"சரி அதை வச்சிட்டு வா , வந்து கால மெறி "
அம்மு ஒரு பாத்திரத்தை எடுத்து .. அந்த மொட்டுகளை அதில் கொட்டினாள்..
அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை ஊன்றியவாரே அவன் கால் மீது ஏறினாள் ...
" அம்மு சாப்பிட்டியா"
"ம்ம் சாப்பிட்னே"
" அம்மு நாளைக்கு அம்மா கூட நீயும் போறியா ... அண்ணன் போவட்டும் .. நீ இருக்கியா .."
வெளியே காய்கறி விற்கும் வண்டி சத்தம் கேட்டது ..
"இல்ல நான் போவேன் ... அவனை இருக்க சொல்லு "
" நானும் போவேன் "
" சரி..சண்டை போடாதீங்க .. ரெண்டு பேரும் போங்க ... எங்க உங்கம்மா ஆள காணோம் ..."
பக்கத்து தெரு மாரியம்மன் கோவில் ஒலி பெருக்கி ஒலி எழுப்ப தொடங்கியது ... எல். ஆர் . ஈஸ்வரி பாட ஆரம்பித்தார்...
--தொடரும்

No comments:
Post a Comment