வணக்கம் ! என் பெயர் ஆனந்த் ! இல்லை... இல்லை... ஆக்கோ ஆனந்த் . என் பெயருக்கான இரகசியத்தை பின்னர் கூறுகிறேன் . நான் சின்ன வயசிலிருந்தே எல்லா விஷயத்தையும் கொஞ்சம் அதிக ஈடுபாட்டோட செய்வேன் , யார் என்ன பேசினாலும் அதில் என் கருத்தை சொல்ல தவறமாட்டேன் .
நான் எப்பொழுதும் தனித்து தெரியனும் , எல்லோருடைய கவனமும் என் மீது இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பேன் . என் எண்ணம் முதலில் நிறைவேறியது எங்கள் ஊர் திருவிழா பட்டிமன்றத்தில் தான் .
அன்று " எது சிறந்த வெற்றி ? கல்வியால் உயர்வதா ! முயற்சியால் உயர்வதா ! " என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்று கொண்டிருந்தது . நான் "முயற்சியால் உயர்வது " என்ற அணியில் இருந்தேன் .
எங்கள் அணிக்காக நான் பேசிய உணர்ச்சிமிக்க உரையை கேட்ட எங்கள் அணி தலைவர் என்னிடம் " தம்பி ! பட்டிமன்ற பரிசே 50 ரூபாய் திருக்குறள் புத்தகம் தான் நீ ஏன்பா பாகிஸ்தான் , சீனா , தீவிரவாதம் பற்றியெல்லாம் பேசுற " ன்னு என்னை அன்பாய் தொடையில் வலிக்குமாறு கிள்ளினார் .
இறுதியாக நடுவர் தீர்ப்பு கூற முற்பட்டார் . நான் அவரிடம் இரண்டு வார்த்தை மைக்கில் பேச வேண்டும் என கேட்டேன் .
" வேணாம்பா , நீ முதலில் பேசியதர்க்கே பாதி கூட்டம் காணமல் போய்டிச்சு ! தயவு செய்து உன் இடத்துக்கு போ " என்று கெஞ்சினார் . நான் அவரிடம் போராடி மைக்கை வாங்கி மக்களிடம் பேச ஆரம்பித்தேன் " இறுதியாக உங்களிடம் ஒன்று பேச விரும்புகிறேன் ! நமக்கு எப்படி உடல் உறுப்புகள் அனைத்தும் முக்கியமோ அது போல் வெற்றிக்கு கல்வி , முயற்சி இரண்டும் முக்கியம் . முயற்சி இல்லாமல் கல்வியினால் மட்டும் யாராலும் வெற்றி பெற முடியாது . " பேசி முடித்து மைக்கை நடுவரிடம் நீட்டினேன் .
" அதான் நீயே தீர்ப்பு சொல்லிட்டியே இனிமேல் நான் என்ன சொல்றது " கடுப்புடன் மைக்கை வாங்கி கீழே போட்டார் . இந்த சம்பவம் ஒரு உதாரணம் தான் .
நான் எப்பவுமே ஏதாவது புதிய விஷயங்களை முயற்சி செய்து கொண்டேயிருப்பேன் . அப்படியாக என் முயற்சிகளில் சில கிட்டார் வாசிப்பது , கிரிக்கெட் விளையாடுவது , நடிப்பது , கதை மற்றும் கவிதை எழுதுவது .
"மச்சி ! உனக்கு தான் எதுவுமே வரவில்லையே ஏன்டா காச வீணாக்குற "," இனிமேல் கிட்டார் வாசிக்கிறேன் கேளுன்னு என்னை தொல்லை பண்ண இங்கயே தூக்கு மாட்டி செத்துருவேண்டா ", " டேய் powerstar உன்ன விட நல்லா நடிப்பார் டா " இப்படியாக என் நண்பர்கள் என்னை பாராட்டி ஊக்குவித்தனர் .
சென்ற மாதம் _____ தமிழர் இயக்கத்தில் இருந்து ஒரு நண்பர் என்னை சந்தித்தார் . " தம்பி நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க ! நம் இயக்கத்தின் பொது கூட்டத்தில் ஒரு நாள் பேசுறீங்களா ?" என்று கேட்டார் . எனக்கு புல்லரித்தது .
" சார் ! எனக்கு பெருமையா இருக்கு , நீங்க கவலைப்படாதீங்க நான் இந்திய வரலாறு இந்தோனேசியா வரலாறுன்னு எல்லாத்தையும் படிச்சி அங்க வந்து பேசி அமர்க்களப்படுத்திறேன் ."
"நல்லது தம்பி ! கொஞ்சம் தமிழீழம் , தமிழ்நாடு பற்றி எல்லாம் கலந்து பேசுங்க "
" நீங்க கவலப்படதீங்கண்ணா , நான் பாத்துக்கிறேன் ; நம்ம கூட்டத்துக்கு நிதி வேணும்னாலும் கேளுங்க பாத்துக்கலாம் " ன்னு அவரை வழி அனுப்பி வைத்தேன் .
என்னை கிண்டல் செய்த அனைத்து நண்பர்களுக்கும் போன் செய்தேன் " மச்சி இந்த வாரம் ஒரு அரசியல் கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக போகிறேன் ! கூட்டம் மதுரையில் ! கண்டிப்பா வந்துடு , வர முடியலைனாலும் பரவாயில்ல என் பேச்சை பதிவு செய்து உனக்கு அனுப்புறேன் " பேசி முடிப்பதற்குள் எதிர் முனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது .
( எல்லாம் பொறாமை பிடிச்சவங்க !)
என் சொந்த செலவில் மதுரை ஆரப்பாளயத்தில் நடைபெற்ற இயக்கத்தின் கூட்டத்திற்கு சென்றேன் . ஒரு 200 நபர்களை எதிர்ப்பார்த்த எனக்கு ஏமாற்றம் தான் . தெருவில் நடந்து கொண்டிருந்தவர்களை சேர்த்தே மொத்தம் 50 பேர் தான் இருந்தனர் . அதில் என்னையும் சேர்த்தே 20 பேர் தான் கருப்பு சட்டை அணிந்திருந்தனர் .
மூத்த சகோதரர்களேல்லாம் பேசி முடித்த பின்னர் என்னிடம் மைக் வந்தது . தமிழீழம் , தமிழ்நாடு , பிரபாகரன், கலைஞர், தமிழ்நாடு , மலையாளம் , தைவான் , சீனா , காவல் துறை , சட்டம் பற்றியெல்லாம் உணர்ச்சிமிக்க பேசினேன் .
கூட்டம் முடிந்த பின்னர் நால்வர் என்னை ஒரு ஓரமாக அழைத்து சென்றனர் . செம அடி ! நான் மயக்கமடைந்தேன் ! .
கண் விழித்து பார்க்கையில் காவல் நிலையம் " ஏண்டா உனக்கு மைக் கிடைச்சா என்ன வேணும்னாலும் பேசுவியா , காவல் துறைக்கும் தமிழீழத்துக்கும் என்னடா சம்மதம் ? 1 மாசம் உள்ளே இரு அப்போ தான் உனக்கு எல்லாம் புத்தி வரும் " அந்த காவலாளி என் மூக்கில் மீண்டும் ஒரு குத்து விட்டார் .
என் பெயருக்கான இரகசியம் தானே " ஆக்கோ = ஆர்வக் + கோளாறு " .

No comments:
Post a Comment